Abstract:
இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவர், வைரவர், வடுகர் போன்ற பெயர்களாலும் சுட்டப்படுகிறார். சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கனி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிர- போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் கலக நாளாகக் குறிப்பிடப்படும் செவ்வாய்க்கிழமையே குறிப்பாகத் தைமாத செவ்வாய்க்கிழமை உகந்த மாதமாகவும் சிவந்த செவ்வரத்தம்பூ உகந்த மலராகவும் பரணி நட்சத்திரம் (போருடன் தொடர்புடையது) உரிய நட்சத்திரமாகவும் கூறப்படுகிறது.
புராணங்களில் இவரை "மஹா வைரவர், காலவைரவர், உக்கிர வைரவர், வடுகநாதர், சட்டைநாதர்” எனப் பலவாறு கூறப்பட்டுள்ளது. சிவபராக்கியம் எனும் நூல் அஷ்ட வைரவர்களைக் குறிப்பிடுகிறது. இவ்வைரவரின் தோற்றப் பொலிவு பற்றிப் பல விடயங்கள் கூறப்படினும் பொதுவில் மூன்று வண்ணம் கைகளில் கபாலம், தண்டம், தமருகம், சூலம் என்பவற்றை ஏந்தியரவாகக் கூறப்படுகிறார். நாய் வாகனத்தை (தெய்வஞாளி, சுவனம்) உடையவராக சித்தரிக்கப்படுகிறார். இத்தெய்வத்திற்குப் பொங்கல், மிருகபலி, போன்றன செய்து வழிபடும் மரபு இற்றைவரை காணப்படுகிறது. அத்தோடு வைரவருக்கு பிரதேசப் பண்பாட்டுக் கூறுகளுக்கு இணங்கவும் வழிபாடியற்றப்படுகிறது. ஆகமக் கோயில்களில் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் காவல் தெய்வமாகவும், மகோற்சவ காலங்களில் வைரவரைக் கட்டுதல், வைரவர் சாந்தி செய்தல் முதலானவை நடைபெறுவதையும் அவதானிக்கலாம்.
தமிழகச் சூழலில் வைரவர் வழிபாடு நிலவி வந்தாலும் பெருஞ்செல்வாக்குற்றதாகக் கூறமுடியாது உள்ளது. ஆனால் ஈழத்தில் சிறு தெய்வமாக, பெருந்தெ பெருஞ்செல்வாக்குற்றுக் காணப்படுகிறது. இதற்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம்.
1. கந்தபுராணச் செல்வாக்கு
2. ஈழத்தில் ஆதிக்க மதமான சைவம் (இந்து சமயத்துள்) இருந்தலும் வைரவர் சிவனின்
அம்சமாக எடுத்துரைக்கப்படுதலும்
3. ஒல்லாந்தர் கால சமய அடக்குமுறை அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரல்
4. சூல வழிபாட்டு முறை - எளிய வழிபாட்டு முறை
5. சைவ மேனிலையாக்கம் அல்லது சமஸ்கிருத மயமாதல்
"யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராண கலாசாரம்” என்பார் பண்டிதமணி. கந்தராணம் முன்னிறுத்தும் சிவகுமாரர்களுள் ஒருவர் என்றும் அவரின் உக்கிர அம்சமாக வைரவர் சுட்டப்படுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது. வைரவ வழிபாடு எப்போது ஈழத்திற்கு வந்தது என்பது தெளிவாக உரைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த ஈழத்தில் சுதேச சமயமான சைவசமயத்தை நிலைநாட்ட அக்கால மக்கள் பயன்படுத்திய உபாயமாகவும் முக்கிய செயற்பாட்டாகவும் அமைந்தது. திரிசூல வழிபாடாகும். இத்திரிசூல வழிபாடு என்பது பெரிதும் வைரவர் வழிபாடாகவே அமைந்திருந்தது.சுதேச சமய நடைமுறைகளைப் பின்பற்றுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அச்சூழலில் மரங்கள், நீர்நிலைகள், விவசாய உற்பத்தி நிலங்கள். சில மறைவிடங்கள் என்பவற்றில் இவ்வைரவ வழிபாடு நிகழ்த்தப் பெற்றுள்ளது.
ஒல்லாந்த அரசின் அடக்குமுறைக்கெதிரான மௌனக் குரலாகவும் குறியாகவும் சூலத்தைக் குறிப்பிடலாம். அதேவேளை பரமனை மதித்திடாத பங்கையாசனனுக்கு நிகழ்ந்ததே ஒல்லாந்தருக்கும் நிகழும் என்பதைக் குறியீடாக சைவவழிபாட்டினூடு உணர்த்தியிருக்கக்கூடும் வானவர் தலையைக் கொய்ததன் குறியீடான மண்டையோட்டு மாலையைக் குறிப்பதாக அமைந்த உழுந்துவடை மாலையும் குருதி பெற்ற கதையினடையாளமாக சிவப்புநிற செவ்வரத்தம் பூ தரித்தலும் ஒல்லந்தருக்கான எச்சரிக்கையோ அல்லது சுதேசிகளின் சமயத்தை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக மக்களை கொதி நிலையில் உணர்ச்சிப் பிரவாகத்தில் வைத்திருக்கும் செயற்பாடாகவோ வைரவ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்கலாம். தாம் தாம் விரும்பிய நிலையிலும் வகையிலும் மிருகபலி, மடை பரவுதல் தொட்டு ஆகமப்பண்பாடு வரை வைரவ வழிபாடு அகலக் காலூன்றி நிலைத்து நின்றது. ஆகமப் பண்பாட்டை முன்னிறுத்தி சைவ மீட்டுருவாக்கத்தைச் செய்த ஆறுமுகநாவலர் சிவபெருமானின் மகன்களில் ஒருவராக வைரவரைச் சுட்டி அவ்வழிபாட்டை உள்ளீர்த்தமை. யாழ்ப்பாணத்தில் அவ்வழிபாட்டுக்கான மேனிலையாக்கத்தையும் ஸ்திர நிலையையும் வழங்கியது.
யாழ்ப்பாணத்தின் அவ்வச் சமூகத்தின் நோக்கிற்கேற்ப வைரவர் காலவைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர், கபாலவைரவர், நரசிம்மவைரவர், கிங்கிலியவைரவர், எனப் பலவாறு வழிபட்டு வருகின்றார். அதேபோல ஆலயம் அல்லது சூலம் அமைந்திருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு இத்திய வைரவர், சுடலை வைரவர், ஆலடி வைரவர், எனப் பலவாறு சுட்டப்படுகிறார். ஆகமக் கோயில்களில் வடுகநாதராகவும், ஷேத்திர பாலகராகவும் காளியின் தலைவராகவும் சுட்டப்படுகிறார். இணுவில், தெல்லிப்பளை, உரும்பிராய், சிறுப்பிட்டி, வடமராட்சி உள்ளிட்ட பல இடங்களில் ஆகம மயப்பட்ட, ஆகம மயப்படாத மிருகபலியோடு கூடிய நாட்டாரியல் பண்புகள் நிறைந்ததான வைரவர் வழிபாட்டு மரபுகள் இன்றுவரை காணப்படுகின்றன.
காலனித்துவ அதிகாரத்திற்கெதிரான ஒலி வெளிப்படாத ஆழவூடுருவித்தாக்கும் கலகக் குரலாகவே போர்த் தெய்வமான வைரவரும் ஆயுதமான திரிசூலமும் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயகமான பேதமற்ற - சாதியக்கட்டுமானம் தாண்டிய மக்கட் தெய்வமாக விளங்கினார். நாவலர் சிவனினம்சமான மகனாக எடுத்துரைத்து மேனிலைத் தெய்வமாக்கினார். இதன்வழி நாட்டாரியல் வழிபாடு, ஆகம வழிபாடு எனும் இருதளமரபிற்குரியதாக சிறுமரபு பெருமரபு என வைரவ வழிபாடு மாற்றமுற்றது. பின் இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், இலவசக் கல்வி, போன்றனவும் நகரமயமாதலும் வைரவ வழிபாட்டை பெருமரபாக்கினர். இனவிடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, போர் என்பன வைரவ வழிபாட்டை மீள் முக்கியத்துவம் பெறச் செய்தன. 1995இல் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னான மீள் வருகை புதிய அசைவியக்கங்களை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியது. இராணுவக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழில்நுட்பத் தொடர்பாடல் வசதிகள், பொருளாதாரத் தடைநீக்கம் திறந்த பொருளாதாரம் சடுதியான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் (சட்டரீதியாவும் களவாவும்) பொருளாதார ஏற்றம், கல்வி, என்பன அவற்றுள் சில. இதன் வழி வாழ்க்கைத் தரம் உயர்கிறது. யுத்தத்தின் நேரடித் தாக்கம் ஓரளவு குறைந்ததனால் மக்கள் தெய்வமாக யுத்தத்தின் அடையாளமாக இருந்த வைரவரை மக்கள் தம் மனங்கட்கேற்ப சாந்த சொரூபியாக ஞானவைரவராக மாற்றிவிடுகின்றனர். ஆகமமரபுவழி ஆலயங்கள் புனருத்தாரனம் செய்யப்படுகின்றன. பிராமணர்கள் பூசை செய்ய நியமிக்கப்பட்டனர். அலங்கார உற்சவங்கள் நடைபெறும் கோயில்களாயின. சில ஆலயங்களில் இரதோற்சவங்களும் நடைபெறுகின்றன.
நகரமயமாதல், உலகமயமாதல், மேனிலையாக்கம் எனும் தளக் கூறுகளின் வழி ஏற்பட்ட சமூக அசைவியக்கமாகவே நாட்டார் பண்பாட்டடையாளமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண வைரவர் வழிபாடு பெருமரபாக சமஸ்கிருத மயமாதலுக்குள்ளான பெருந் தெய்வமாகி சமூக, சாதி அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கான சமூகக் குறியீடாக சூலக்குறியீட்டைப் புறந்தள்ளி கருங்கற் தெய்வமாக எழுந்தருளி விக்கிரகமாக (செப்பு) பெருஞ் சிலையாக எழுச்சி பெற்று நிற்பதை இன்று அவதானிக்க முடிகிறது.
சமஸ்கிருத மயமாதலுக்கும் சாதி வர்க்கப் படிநிலைக்கும் இடையேயான இயங்கு நிலை அவதானத்திற்குரியதொன்றாகும். அதிகாரம்மிகு சாதியத்திற்கு சமஸ்கிருத மயமாதலுக்கும் இடையிலுள்ள உறவுநிலை கெட்டித்த தன்மையுடையதாகும். அதனாலேயே கீழ்நிலையிலிருந்து மேலெழவிரும்பும் குறித்த மனிதர், குறித்த சாதி, குறித்த வர்க்கம் அதிகார மனிதர்களின் சாதிக்கோ வர்க்கத்திற்கோ சமமாகத் தன் அந்தஸ்தை ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இம்முயற்சிக்கு அனுசரணை செய்வன பொருளாதாரம், அதிகாரம், சடங்கு எனும் தகுதிப்பாடுகளாகும் இவற்றில் பெரும்பான்மையைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் தன்னதிகாரத்தை - சமூகந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது இதன் வெளிப்பாடே சுடலை வைரவரும் கிணற்றடி வைரவரும் முச்சந்தி வைரவரும் 'ஞான வைரவரான' வரலாறு எனலாம்.
இவ்வாய்வியல் நாட்டாரியல் சார்ந்த வைரவ வழிபாட்டின் எழுச்சியும் அதன் பின்னான அதன் மேனிலையாக்கமும் அதன் சமகால செல்நெறியும் பற்றி ஆய்வதே இவ்வாய்வின் கருதுகோளாகும். விவரணம் என்பனவற்றோடு பகுப்பாய்வு முறையும் இவ்வாய்வில் வரலாறு, பயன்படுத்தப்பட்டுள்ளது.