Abstract:
நவீன தமிழ் இலக்கிய வடிவங்களுள் ஈழத்தில் அதிக வீச்சோடு இயங்கி வருவது கவிதையாகும். ஈழத்தின் வடபுலத்தில் உள்ளடங்கும் வன்னி, யாழ்ப்பாண பிரதேசங்களில் இப்புதிய நூற்றாண்டில் பல கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. அவை சுய ஆக்கங்களையும் மொழிபெயர்ப்புக்களாகவும் அமைந்துள்ளன. அவை யுத்தம் சார்ந்த வாழ்வியற் புலத்தின் ரணங்களையும் கழிவிரக்கங்களையும் பேசுவதோடு தத்தம் பார்வையில் விமர்சனங்களையும் முன்வைக்கின்றன. இந்த ஆய்வில் இந்நூற்றாண்டில் எழுதத் தொடங்கியவர்களினதும் முன்பிருந்தே எழுதி வருபவர்களினதும் கவிதைகள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. இக்காலக் கவிதைகளின் கருத்தியல், மொழியியல், கவித்துவம், அவற்றின் அரசியல், கவிஞரின் அரசியல் போன்ற அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டு ஆராயப்படுகின்றன. இதுவே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஈழத்து கவிதா செல்நெறியில் இக்காலக் கவிதைகளின் வகிபாகம் இங்கு ஆய்வுப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இதனை ஆராய விவரணம், வரலாற்றுமுறை, ஒப்பீடு முதலான ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்படுகின்றன.