Abstract:
சைவ சமய பக்திப் பனுவல்களுள் அடங்கன் முறை எனச் சிறப்பிக்கப்படும் தேவாரங்களுக்குத் தனியிடமுண்டு. சைவத்தின் சமய, சமூக, தத்துவ வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாகவும் தமிழ் நாட்டில் அவைதீக நெறிகளிடமிருந்து மக்களையும் மன்னர்களையும் சைவத்தின் பாற்படுத்தி மீட்டுருவாக்கம் செய்த பக்தியியக்கத்தின் குரலாகவும் தேவாரங்கள் வர்ணிக்கப்படுகின்றன. தமிழில் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் / சிற்றிலக்கியங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தூதிலக்கியமாகும். ஆரம்பகாலத்தில் புறப்பண்பியலுக்குரியதாக எடுத்தாளப்பட்டுப் பின் தமிழிலக்கியங்களில் முக்கியமான அகவிலக்கிய வடிவமாகத் “தூது” எடுத்தாளப்பட்டுள்ளது. அந்த வகையில் பக்தி இலக்கிய மரபில் தூது வடிவத்தை முதலில் கையாண்டவர்களாகத் தேவார முதலிகள் சுட்டப்படுகின்றனர். உலகியல் சார்ந்திருந்த அகமரபை தெய்வீக அகமரபாக்கியதைப் போல தூதிலக்கியமும் தெய்வீகமயமாக்கப்பட்டது. இறைபெருமை பேசுவதாகக் கட்டமைக்கப்பட்டது. இப்பதிகங்கள் தூது வடிவத்தினூடு எவ்வாறு இறையான்ம உறவை வெளிப்படுத்துகின்றன என்பதை சைவசித்தாந்த கோட்பாட்டியற் றளத்தில் நின்று இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.