Abstract:
தமிழகம் சமண, பௌத்த சமயங்களின் ஆளுகைக்கும் அந்நியராட்சிக்கும் உட்பட்டிருந்த காலத்தில் சைவ, வைணவ பக்தியிலக்கியங்கள் உருவாகி அவற்றுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தன. அவைதிக சமயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்த்துப் போராடின. நாயன்மார்கள் சமய, மொழி, பிரதேச, உணர்வுகளையூட்டி அற்புதங்கள் நிகழ்த்தி வாதங்கள் செய்து வென்று சைவத்தை நிலைநாட்டினர். அவர்களுள் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் முதன்மையானவர்களாவார். அவர்கள் இயற்றிய செய்யுட்கள் தேவாரங்கள், அடங்கன்முறை என அழைக்கப்படுகின்றன. தேவாரமுதலிகள் பிறசமயங்களை நிராகரணம் செய்து தம் சமயமாகிய சைவத்தை நிறுவியதோடு அதனை மறுசீராக்கம் செய்யவும் முற்பட்டனர். பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து சாதாரண மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத வெறுஞ்சடங்குகளின் வழி அந்நியப்பட்டுப் போன தாந்திரிக சைவப்பிரிவுகளை நாயன்மார்கள் எதிர்கொண்ட விதத்தினை இவ்வாய்வு ஆராய்கிறது. அச்சைவப்பிரிவுகளை தேவாரங்கள் ஏற்றுக்கொண்டனவா இல்லையா என்பதே இங்கு ஆய்வுப்பிரச்சனையாகக் கொள்ளப்படுகிறது. ஆகம மயப்பட்ட சைவம் - செவ்விதான சைவவுருவாக்கம் தேவாரங்களினூடாக நிகழ்ந்தது இதன் கருதுகோளாகும். விவரணம், பகுப்பாய்வு, ஒப்பீடு எனும் முறையியல்கள் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.