dc.description.abstract |
தமிழின் தொன்மை இலக்கியங்களுள் திருக்குறளும் ஒன்றாகும். தமிழர் மெய்யியற் செல்நெறியில் மணிமேகலையை அடுத்து தனக்கான தனித்துவமான மெய்யியற் பண்பை உடைய நூலாகத் திருக்குறளைச் சுட்டலாம். மெய்யியல் என்பது தமிழில் மெய்ஞ்ஞானம் தத்துவம் என்று கூறப்பட வள்ளுவரோ மெய்யுணர்தல் எனச் சுட்டியுரைத்துள்ளார். மெய்யுணர்வு என்பதனைக் கழகத்தமிழகராதி உண்மையை அறிதல் நல்லறிவு எனத்தற்காலத்தில் பொருள் சுட்டி நிற்கிறது ஆனால் பரிமேலழகர் 'பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களின்றி உண்மையாள் உணர்தல் இதனை வடநூலார் 'தத்துவம் ஞானம்' எனக்கூறி போந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை குறளின் அதிகார வைப்பு முறையை விளக்கப்போந்த பரிமேலழகர் பற்றற்றான் பற்றினைப் பற்றிய வழி உள்ளதாவது ஆகலின், அக்காரண ஒற்றுமை பற்றிதிதுறவின் பின் வைக்கப்பட்டது' என உரைத்திருப்பது கருத்து முதல்வாத அடிப்படையிலானது.திருக்குறள் ஐயம் எனும் குற்றங்களில் நின்றும் நீங்கி உண்மையை பொருளை அறிதலே மெய்யுணர்தல் என்கிறது. மருள் நீங்கிய - இருள் நீங்கிய மாசறு காட்சி, கற்றீண்டு மெய் பொருள் கண்டார் மொழி, உள்ளது உணர்தல் (உய்த்தறிதல்) எனும் மூவகை பிரமாணங்களை எடுத்தாள்கிறது. மெய்யியலின் அடிப்படை ஐயவாதம் என மெய்யியாளர்களின் கருத்தியல் வள்ளுவரிடமும் இருந்துள்ளது. ஐயத்தின் நீங்கித் தெளிந்தவரே உலகுக்கப்பாலான வானுலகையும் (வீடு) எய்துவர் என்கிறார். மெய்யியலின் தேடல் மெய்ப்பொருள் அறிதல் என்கிறார். பிறப்பு அதன்வழிவரும் காமம், வெகுளி, மயக்கம் நீங்குதலும் செம்பொருள் காண்பதாய அறிவும் மெய்யியலின் பேறாக வள்ளுவரால் சுட்டப்படுகிறது. திருவள்ளுவர் திருக்குறளின் மெய்யுணர்தல் எனும் அதிகாரத்தின் வழி கட்டமைக்கும் கருத்தியலை நோக்குதல்.அக்கருத்தினை தமிழர் மெய்யியற் செல்நெறியில் பெற்ற செல்வாக்கு அல்லது தாக்கத்தை ஆராய்தல்.மெய்யியல் பற்றிய வள்ளுவரின் புரிதலை மதிப்பிடுதல். தமிழரின் மெய்யியல் பற்றிய தொன்மக்கருத்தியவை தெளிவுபடுத்தல் என்பன இவ்வாய்வின் நோக்கங்களாக அமைகின்றன. இங்கு ஆய்வு மூலங்களாக திருக்குறள், கீழைத்தேய தத்துவங்களின் மூல நூல்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. தவிர மெய்யியல் பற்றிய துணை ஃகருவி நூல்களும் எடுத்தாளப்படுகின்றன. திருக்குறளின் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தின் வழி அந்நூலின் மெய்யியல் பற்றிய கருத்தியலை ஆராய்தல், பிரமாதா, பிரமேயம், பிரமாணம் பற்றிய கருத்தியல்களை இனங்காணல், திருக்குறளின் போலிகள்' பற்றிய கருத்தியலை ஆராய்ந்தறிதல் ,மெய்யுணர்தல் என்பதன்வழி கூறப்படும், பிறப்பு, மோட்சம் பற்றிய கருத்துக்களை ஆராய்தல் என்பன ஆய்வின் நோக்கங்களாகும். இவ்வாய்வில், பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு, விமர்சனவாய்வு என்பன பயன்படுத்தப்படுகின்றன. |
en_US |