Abstract:
நவீன தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழத்து இலக்கியவாதிகளுக்குத் தனித்த இடமுண்டு. பதிப்பு, உரைநடை, இலக்கிய வரலாறு எழுதுதல், இலக்கணவிளக்கம் எனப் பல தளங்களில் முன்னோடித் தன்மையும் காத்திரமான பங்களிப்பும் தொடரியங்கலும் ஈழத்தவருக்குண்டு. அந்த அடிப்படையில் விமர்சன மெய்யியல் தளத்தில் ஈழத்தவரின் வகிபாகத்தையும், கலாரசனை சார்ந்த கருத்து நிலைகளையும் மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். விமர்சனம் என்பது குறித்த படைப்பின் மெய்மையை – மைய இழையை சரிவர இனங்கண்டு அதனை உரிய கருத்தியற் தளத்தில் பல்வகைமையாக ஆராய்ந்து வாசகனிடத்தே இட்டுச்செல்வதாகும். கலை இலக்கித்தளத்தை முன்னகர்த்திச் செல்லும் படைப்பாளியின் பாதையை செப்பனிடவும் சுவைஞனது கலாரசனையை விருத்தியுறச் செய்யவும் விமர்சனத்தின் வகிபாகம் இன்றியமையாததாகும். காலப்பெருநதியில் கலை, இலக்கியத்தின் மாற்றத்தைப் புரிந்து கொண்டு கலாரசனையும் மாற்றமுறுவது தவிர்க்க இயலாது என்பது போல விமர்சனமும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளல் அவசியமாகும். அந்த அடிப்படையில் ஈழத்து நவீனசூழலுக்கு ஏற்ப இலக்கிய விமர்சனமும் கலாரசனையும் தத்தம் தரத்தை எவ்வகையில் கட்டமைத்துள்ளன என்பதே இங்கு ஆய்வுப்பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு வரலாறு முறை, விவரணம், ஒப்பீடு ஆகிய ஆய்வுமுறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.