Abstract:
ஒவ்வொரு சமூகமும் தன்னை இனங்காட்டிக் கொள்வதற்கு பல மூலங்களை உள்ளடக்கி இருந்தாலும் அச்சமூகங்களில் இருந்து வெளிப்படும் இசை மரபானது இந்த இனங்காட்டலை இலகுவானதாகச் செயற்படுத்திக் கொள்கின்றது. அது மட்டுமல்லாமல் தான் வாழும் சமூகத்தின் உயிராகவும் இந்த இசைமரபுகள் விளங்குகின்றன. இசையானது எல்லா சமூகத்திலும் பிரிக்கமுடியாத ஒரு மூலக்கூறாகவும், தான் வாழும் சமூகத்தின் பிரதி விம்பமாகவும் தொழிற்படக்கூடியது. அந்தவகையில் 'தாலாட்டு' என்னும் நாட்டார்பாடல் இசைக்கூறு உலகின் எல்லா சமூகக் குழுக்களிடத்திலும் வழக்கிலிருந்து வருவதை பல்வேறுபட்ட ஆய்வு முடிவுகள் தெற்றெனக்காட்டி நிற்கின்றன. ஒவ்வொரு மானுடத்தின் மலர்விலும் இந்தப் பாடல்வகை பிரிக்கமுடியாததொன்றாகப் பின்னிப்பிணைந்திருக்கின்றது. உலகிலே கால் பதிக்கும் குழந்தைக்கு அது வாழப்போகும் சமூத்தின் ஓர் அறிமுகத்தினை இந்தப்பாடல்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை அமையும். அந்தக் குழந்தைக்குரிய சமூகம் அதன் மனதிலே படிப்படியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. உலகின் பல்வேறுபட்ட சமூகங்களிலே இந்தப் பாடல்வகையானது பல மாறுபாடுகளுடன் பயன்படுத்தப்பட்டாலும் அதன் நோக்கம் ஒன்றாகவே அமைந்திருக்கக் காணமுடிகின்றது. இவ்வாய்வானது சமூக அடையாளத்தினை வெளிப்படுத்துவதில் தாலாட்டுப்பால்கள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதனை விரிவாக நோக்குவதாக அமையும். அதே சமயம் தாலாட்டுப்பால்களின் இசையியல் அமைதி பற்றியும் விரிவாக ஆராயும். பல்வேறுபட்ட சமூகங்களை இந்த ஆய்வானது தளமாக எடுத்துக் கொண்டாலும் யாழ்ப்பாணத்தில் வாழும் சமூகத்தினைச் சிறப்பாகவும் விரிவாகவும் இந்த ஆய்வு நோக்கும். இது தவிர குறிப்பாக யாழ்ப்பாணச்; சமூகத்தினைப் பொறுத்தவரையிலே எத்தனையோ சவால்களுக்கு மத்தியிலும் தனக்குரிய தனித்துவங்களோடு தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கு பாடுபட்டு முயற்சித்துவரும் இந்த வேளையிலே, இவ்வாறான மீள்வலியுறுத்தல்கள் மிகவும் அவசியமானவையாகவும் பொருத்த மானவையாகவும் விளங்குகின்றன.