Abstract:
இந்த ஆய்வுக் கட்டுரை றூடோல்ஃப் கார்னப் மற்றும் ஏ.ஜே.அயர் ஆகியோரால் முன்வைக் கப்பட்ட பௌதிகவதீதத்தை நீக்குவதற்கான தர்க்கப் புலனறிவாதத் திட்டத்தை ஆராய்வதாக அமைகின்றது. பௌதிகவதீதக் கூற்றுக்கள் புலன் அனுபவத்திற்கு அப்பாற் பட்ட கடந்தநிலை உண்மைகள் அல்லது யதார்த்தங்களைப் பற்றியவை. அவை விஞ்ஞான பூர்வமானவை அல்ல என்பது மட்டுமல்ல அர்த்தமற்றவையும் ஆகும் என்பது அவர்களின் பொதுவான நம்பிக்கை. மொழியியல் பகுப்பாய்வு மற்றும் வாய்ப்புப்பார்த்தல் கோட்பாடு என்பவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் அர்த்தமுள்ள கூற்றுக்களின் எல்லைகளை வரையறுக்க முயன்றனர். கார்னப்பின் விமர்சனம் பௌதிகவதீதத்தில் மொழியைத் தவறாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு பல பௌதிகவதீதச் சொற்கள் வரையறுக்கப்பட்ட அனுபவ உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை அல்லது வாக்கிய அமைப்பு தர்க்க விதிகளை மீறுகின்றன என்றும் வாதிடுகிறது. அனுபவம் மூலம் வாய்ப்புப்பார்க்க முடிந்தால் மட்டுமே கூற்றுக்கள் உண்மைப் பெறுமான ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று வலியுறுத்துவதன் மூலம் அயர் இந்த நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறார். எனவே இரு மெய்யியலாளர்களும் உளவியல் அல்லது கலாச்சார அடிப்படையினால் அன்றி இறுக்கமான தர்க்கம் மற்றும் மொழியியல் அளவுகோல்களினால் பௌதிகவதீதத்தை நிராகரிக்கின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரையானது அவர்களின் நிலைப்பாட்டிற்குப் பின்னால் உள்ள அறிவுசார் உந்துதல்களை, குறிப்பாக ஹெகலிய கருத்துமுதல்வாதம் போன்ற பௌதிகவதீத மரபுகளுக்கு எதிரான அவர்களின் எதிர்வினையினையும் இயற்கை விஞ்ஞான முறைகளுடன் மெய்யியலை இணைப்பதற்கான அவர்களின் பரந்த விருப்பத்தையும் ஆராய்கிறது. அத்தோடு பிற்கால மெய்யியலாளர்களின் விமர்சனங்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் கார்னப், அயர் ஆகியோரின் தர்க்கப் புலனறிவாதத் திட்டத்தின் வெற்றி குறித்தும் அதன் வரம்புகள் குறித்தும் இந்த ஆய்வு மேலும் மதிப்பிடுகிறது. இந்த ஆய்வானது முதன்நிலை மற்றும் இரண்டாம் நிலை மெய்யியல் நூல்களின் உரைப் பகுப்பாய்வில் கவனம் செலுத்தும் ஒரு பண்புசார் பகுப்பாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்க்கப் புலனறிவாத விமர்சனத்தின் ஒத்திசைவு மற்றும் வலிதான தன்மையைத் தீர்மானிக்க வாதங்கள் தொடர்பாக தர்க்கரீதியான பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு பௌதிக வதீத விசாரணையின் சமகாலப் பொருத்தப்பாட்டை மதிப்பிடுவதற்காக தர்க்கப் புலனறி வாதத்திற்கான பதில்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு கார்னப், அயர் ஆகிய இருவரது சிந்தனைகளும் பாரம்பரிய பௌதிகவதீதத்தில் உள்ள மொழியியல் மற்றும் கருத்தியல் குழப்பங்களைத் தெளிவுபடுத்தி மெய்யியல் விசாரணைகளில் இருந்து பௌதிகவ தீதத்தை நீக்குவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டிருந்த போதிலும் அவர்களின் முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பதனையும் மெய்யியல் உரையாடல்களில் பௌதிகவதீதம் தன்னிருப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதனையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.