Abstract:
சமகால சமூகக் கட்டமைப்பில் தனிமனித மற்றும் கூட்டு வாழ்வியல் என்பன
பன்முக சவால்கள், கட்டமைக்கப்பட்ட நெருக்கடிகள் என்பவற்றுக்குள்ளாகிவருகின்றன.
குறிப்பாக, இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின்
வாழைச்சேனைப் பிரதேசத்தில் நிலவும் பின்தங்கிய நிலையையும் இதற்கான
எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இப்பிரதேசத்தில் வாழும் பொதுமக்களின் நிலையற்ற
வருமான வழிகள், பொருளாதார நெருக்கடிகள், சமூகப் பிரச்சினைகள் குறித்த போதிய
விழிப்புணர்வின்மை, கல்வி வாய்ப்புகளின்மை, போதிய சுகாதார உட்கட்டமைப்பு
வசதிகளின்மை என்பன இச்சமூகத்தை ஆழமாகப் பதித்துள்ளது. இத்தகைய
பின்னணியில் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
ஆயினும் இன்று வரையும் அது முழுமையானதொரு மக்கள் மையப் பணிகளை
முன்னெடுக்காமையால், சமூக நல அமைப்புகள் பல தோன்றி பல்வேறு திட்டங்களையும்
முன்னெடுத்து வருகின்றன. அவ்வாறே பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின்
தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில், மட்டக்களப்பு
பிராந்தியத்தில் தோற்றம் பெற்ற ஒரு முக்கிய சமூக நல அமைப்பாக 'எமது சமூகம்'
என்னும் அமைப்பு அடையாளப்படுத்தப்படுகின்றது. வாழைச்சேனைப் பிரதேசத்தில்
'எமது சமூகம்' அமைப்பானது நீண்ட காலமாக சமூக நலப் பணிகளை மேற்கொண்டு
வருகின்ற போதிலும், இவ்வமைப்பினால்; மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்
மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையாமல் காணப்படுகின்றமையும் சூழமைவு இறையியற்
பார்வையில் 'எமது சமூகம்' அமைப்பின் பங்களிப்புகள் பற்றி உற்றுநோக்கப்படாமையும்
ஆய்வுத் தேடலுக்கு வித்திட்டுள்ளது. வாழைச்சேனைப் பிரதேசத்தில் 'எமது சமூகம்'
அமைப்பினால் மேற்கொள்ளப்படும் சமூக நலப் பணிகளைக் கண்டறிந்து, அதனை
கிறிஸ்தவ சூழமைவு இறையியல் பார்வையுடன் ஒப்பீடு செய்து 'எமது சமூகம்'
அமைப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேம்படுத்துவதற்கான
பரிந்துரைகளை முன்வைப்பதே இவ் ஆய்வின் பிரதாக நோக்கமாகும். 'எமது சமூகம்'
அமைப்பின் இணைப்பாளர் அவர்களிடம் நேரடியான நேர்காணல் மூலம் பெறப்பட்ட
தரவுகளையும், அமைப்பின் ஆண்டறிக்கை மூலம் பெறப்பட்ட தரவுகளையும்
அடிப்படையாகக் கொண்டு உய்த்துணர் முறை மூலம் கிறிஸ்தவ சூழமைவு இறையியல்
பார்வையில் விடயம் ஆராயப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும்
மக்களை மேம்படுத்துவதில் 'எமது சமூகம்' அமைப்பின் பங்களிப்புகளை கிறிஸ்தவ
சூழமைவு இறையியல் கோட்பாடுகளுடன் ஒப்பீடு செய்து, விடயங்கள்
தொகுக்கப்பட்டுள்ள. இதன்படி ஆய்வில் கிறிஸ்தவ சூழமைவு இறையியல்
கோட்பாடுகள், மக்கள் சார்ந்த பிரச்சினைகள், 'எமது சமூகம்' அமைப்பு கல்வி, சுகாதாரம்,
வாழ்வாதாரம், கலாசாரம் போன்ற நான்கு துறைகளில் மேற்கொள்ளும் செயற்பாடுகளை
ஆய்வு எடுத்துரைப்பதுடன், குறித்த அமைப்பானது எதிர்கொள்ளும் சவால்களும்
அதற்கான பரிந்துரைகளும் ஆய்வில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வானது
வாழைச்சேனைப் பிரதேச மக்களின் வாழ்வியலில் 'எமது சமூக' அமைப்பு ஏற்படுத்திய
பிரதான வளர்ச்சி நிலைகளை எடுத்துரைக்கும் ஒரு வரலாற்று ஆவணப்பதிவாகவும்
அமைந்துள்ளது.