| dc.description.abstract |
சங்ககாலச் சமுதாயத்தில் பெண்கள், இல்லத்தைப் பேணுதல், பொருளீட்டல்,
கலைப்பயிற்சி, அரசியல் ஈடுபாடு, படைப்பாக்கம் போன்ற ஆளுமைப் பண்புகள்
நிறைந்தவர்களாக விளங்கியுள்ளனர். இவற்றுள் பெண்களின் படைப்பாளுமை என்பது
தனித்து நோக்கப்பட வேண்டியதொன்று. சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் பெற்றிருந்த
படைப்பாளுமைத் திறன்களை நோக்கும்போது அறிவுசார் துறையில் பெண்களுக்குப் பெரிய
தடைகள் எதுவும் இல்லை என்றே கருதவேண்டியுள்ளது. இத்தகையதொரு சூழலில்
சங்கப்புலவர்களின் எண்ணிக்கையில் பெண்பாற் புலவர்களின் மொத்த எண்ணிக்கை
குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். பொதுவாக
பால்விகுதிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்பாலாரையும் ஆண்பாலாரையும்
அடையாளப்படுத்தும் மரபு எம்மிடையே உண்டு. இதே மரபு சங்கப் புலவர்களின் பெயர்
வரிசையிலும் பின்பற்றப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் சில பாடல்கள் இயற்பெயர்
அறியப்படாத புலவர்களால் பாடப்பட்டுள்ளன. இப்புலவர்கள் தாம் பாடிய பாடல்களில்
இடம்பெறும் சிறப்புச்சொற்றொடர் அல்லது உவமையால் பெயர் பெற்றவர்களாக
விளங்குகின்றனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அடைமொழியால் அறியப்பட்ட
புலவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் பால்நிலையை
அடையாளப்படுத்துவது என்பது இன்றைய நிலையில் பெரும் பிரச்சினையாகவுள்ளது.
அடைமொழியால் அறியப்பட்ட சங்கப் புலவர்களுள் ஒருவராகக் கயமனார் அமைகின்றார்.
சங்ககாலச் சிறப்புப்பெயர்கள் (துரை அரங்கசாமி, மொ, அ., 1960), சங்கத் தமிழ்ப் புலவர்
வரிசை (கோவிந்தன், கா.,1961) ஆகிய நூல்களில் கயமனார் பற்றிய குறிப்புக்கள்
இடம்பெற்றுள்ளன. இவை கயமனாரின் பெயர்க்காரணம், பாடற்பொருண்மையின்
சிறப்புக்கள் குறித்த பதிவுகளாகவே அமைகின்றன. இவற்றில் கயமனார் ஆண்
பாற்புலவராகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கயமனார் பாடல்களையும் பாடற்
பொருண்மைகளையும் இனங்காணுதல், அவரது பால்நிலையை அடையாளப்படுத்தல்
ஆகியன இவரது பாடல்கள் தொடர்பில் கவனிக்கப்படவேண்டிய பிரச்சினைகள் ஆகும்.
கயமனார் பாடல்கள் தொடர்பாக இதுவரை வெளிவந்த ஆய்வுகளை நோக்கும்போது
பெரும்பாலானவை அவரைப் பற்றிய விவரணப் பதிவுகளாகவே அமைந்துள்ளன.
கயமனாரின் பால்நிலையைக் கண்டறியும் வகையில் பெண்ணிய அணுகுமுறையின்
வழியான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. சங்கப்பாடல்களைப்
பாடியவர்களுள் அடைமொழியால் அறியப்பட்டவர்களுள் கயமனார் எண்ணிக்கையில்
அதிகமான பாடல்களைப் பாடியவராகக் காணப்படுகின்றார். இவரது பாடல்களில்
பெரும்பான்மையானவை பாலைத்திணையில் உடன்போக்குத்துறையில் பெண்பாத்திரக்
கூற்றுக்களைக் கொண்டவையாக அமைந்துள்ளன. எனவேதான் கயமனாரின் பாடல்கள் முதன்மை மூலங்களாகக் கொள்ளப்பட்டு, அவரது பாடல்களின்வழி கயமனாரின் பால்
நிலையை அடையாளப்படுத்தல் ஆய்வின் நோக்கமாக அமைகின்றது. அடை மொழியால்
அறியப்பட்டவர்களுள் பெண்பாற் புலவர்கள் யாவர் என்ற வினா ஆய்வில் முன்வைக்கப்
படுகின்றது. கயமனாரின் பாடல்களில் வெளிப்பட்டு நிற்கின்ற விவரணங்களினூடாகப்
பெற்றுக்கொள்ளும் தகவல்களை ஒழுங்கமைத்தும் பகுப்பாய்வு செய்தும் ஆண்பாற்
புலவரின் பாடல்களோடு ஒப்பிட்டும் இவரது பால்நிலை அடையாளப்படுத்தப்படும். |
en_US |