Abstract:
மனிதர்கள் மாண்போடு வாழ்வதற்கான உரிமை மனித உரிமைகளிலேயே மிக
முக்கியமானதும் அடிப்படையானதுமானதாக அமைந்துள்ளது. மனித மாண்பைப் போற்றும்
திருவிவிலியம் முழுவதும் பரந்துபட்டு உள்ள சிந்தனைகள் மானுட மாண்பு மற்றும் மானிட
உயிர் சார்ந்ததாகும். கிறிஸ்தவ நோக்கில் மனித உயிர் மூச்சானது மாண்புமிக்கதாகத்
திகழ்கின்றது. மனித உயிர் கடவுள் வழங்கிய மிகப் பெரிய கொடைகளுள் ஒன்றாகும்.
மனிதர்களாகிய ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது.
மனித கொலை என்பது ஒரு மனிதனின் உயிரினை இன்னொரு மனிதர் மரணம் அடையச்
செய்வதாகும். போருக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து சமகாலம் வரை மனித கொலையினால்
வடக்கு மாகாணத்தில் உயிர் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இம்மாகாணத்தில் பதின்மூன்று ஆண்டுகளுள் ஏராளமான உயிர்கள் மனித கொலைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் மனித உயிரை காவுகொள்ளச் செய்வதற்கான
அதிகாரத்தினை மனிதர்களுக்கு வழங்கவில்லை. கிறிஸ்தவமானது மனித உயிரின்
மாண்பினை பத்துக்கட்டளைகள் மூலமாக வலியுறுத்துகின்றது. அவற்றுள் கொலை
செய்யாதே என்ற ஐந்தாவது கட்டளையின் பின்னணியில் மனித கொலைகளை தடுப்பதற்கு
அழைப்புவிடுத்துள்ளது. ஐந்தாவதாக அமையும் இக்கட்டளை ஏனைய மனிதர்களின்
உயிரை கொலை மூலம் காவுகொள்வதை முற்றிலும் நிராகரிக்கின்றது. அத்தோடு
இக்கட்டளை வாயிலாக மனித உயிரின் மாண்பினை உணரச் செய்யத் தூண்டியுள்ளது. இவ்
ஆய்வில் மனித கொலைகள் இடம்பெற்றமைக்கான தரவுகள் மற்றும் கொலைகளில்
செல்வாக்குச் செலுத்தியுள்ள காரணிகள் மற்றும் பாலின ரீதியான எண்ணிக்கைகள் கள
ஆய்வின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. மனித உயிர் கடவுளுக்குச் சொந்தமானது. மனித
உயிர் புனிதமானது, மேன்மையானது மற்றும் விலைமதிப்பற்றது போன்ற சிந்தனைகளை
இவ் ஆய்வானது ஆழப்படுத்தியுள்ளது. மனித கொலைகளைத் தவிர்த்து உயிரைப்
பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகத் திகழ்கின்றது. பிறரில் இறைசாயலை
உணர்வதன் ஊடாகவே மனித கொலைகள் இடம்பெறுவதைக் குறைக்கலாம்.