Abstract:
ஆசிய நாடுகளில் கிறிஸ்தவம் வேரூன்றிய போது அதன் பண்பாட்டு அம்சங்களுடன் இணைத்து கிறிஸ்தவம் தன்னை வளப்படுத்தியதுடன் தனது பண்பாட்டு வளங்களையும் உட்புகுத்தியது. அதன் ஒரு வடிவமாகக் கலை திகழ்கிறது. கலையூடாக மறை சார்ந்த கருத்துக்கள் இலகுவில் மக்களைச் சென்றடையும் வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவம் தழைத்தோங்கியபோது வழிபாட்டு மையங்களாக விளங்கிய பிரமாண்டமான ஆலயங்களில் ஐரோப்பியக் கலை அம்சங்களும் வளமாக ஊடுருவின. அவ்வாறே ஆசியாவில் கிறிஸ்தவம் பரப்பப்பட்டபோது தோன்றிய வழிபாட்டு மையங்கள் சிறிய குடிசை அமைப்புக்களில் காணப்பட்டாலும் தொடர்ந்து, அவற்றின் வளர்ச்சிக் கட்டமானது ஐரோப்பியப் பாணியில் அமைந்த பிரமாண்டமான தூண், உயரமான கூரை என்பவற்றைக் கொண்ட ஆலயங்களாக வடிவம் பெற்றன. போர்த்துக்கேயரின் வருகையுடன் (கி.பி.1505) அதிகாரப்பூர்வமாக அறிமுகமான கிறிஸ்தவம், ஆரம்பத்தில் ஐரோப்பிய மயப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது. சுதந்திரத்திற்கான கருத்துக்கள் வளர்ச்சி பெற்ற காலத்திலே தேசியம், தேசிய உணர்வு என்பன எழுச்சியடையத் தொடங்கின. இக்காலப்பகுதியில் சமயம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்ட மறைபரப்பாளர்களும் தேசியப் பண்பாட்டு அம்சங்களினூடாக சமயக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினர். இதில் ஒரு அம்சமாகக் கலையும் விளங்குகிறது. ஆய்வானது இலங்கைக் கிறிஸ்தவக் கலையில் தேசியப் பண்பாட்டின் பிரதிபலிப்பை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆய்வின் வரையறையைக் கருத்திற் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட இரு அங்கிலிக்கன் ஆலயங்களை மட்டுமே ஆய்வு முதன்மைப்படுத்தியுள்ளது. இலங்கையில் காலனித்துவ ஆட்சி நிலவியபோதும், அதன் பின்னரும் தோன்றிய கிறிஸ்தவ ஆலயங்களில் காணப்படும் கலைப் பிரதிபலிப்புக்களில், தேசியப் பண்பாட்டின் பிரதிபலிப்பு எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளன என்னும் விடயம் ஆழமாக உற்றுநோக்கப்படவில்லை என்னும் வினா ஆய்வுத் தேடலுக்குக் காரணமாயிற்று. இலங்கையிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அங்கிலிக்கன் திரு அவை ஆலய கலையம்சங்களில் அதிகமாகத் தேசிய பண்பாட்டுடன் தொடர்புடைய கலைப் பிரதிபலிப்புக்கள் காணப்;படுகின்றன என்னும் கருதுகோளை ஆய்வு மையப்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டுமானங்கள், அவற்றுடன் தொடர்புடைய கலைப் பிரதிபலிப்புக்களில் தேசியப் பண்பாட்டுடன் தொடர்புடைய கலையம்சங்களின் செல்வாக்கு உண்டு என்பதை எடுத்துரைப்பது ஆய்வின் பிரதானமான நோக்கமாகும். இதற்கென நேர்காணல், கள ஆய்வு மூலம் அவதானிப்பு முறையும் இலங்கையின் தேசியக் கலையம்சங்கள் தொடர்பான தேடலுக்கு நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வு ஏடுகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் தொகுத்தறிவு முறை மற்றும் ஒப்பீட்டாய்வு முறையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ கலைவடிவங்களை தேசியமயமாக்கும் கலைப் படைப்புக்களை அங்கிலிக்கன் ஆலயங்களில் அதன் கட்டட அமைப்பு, செதுக்குக் கலையம்சங்கள், ஆலய பாவனைப் பொருட்கள், ஓவியங்கள் என்பவற்றிலும் அடையாளம் காணலாம். எனவே ஆய்வானது இலங்கையின் தேசியக் கலையம்சங்களுடன் இணைந்த கிறிஸ்தவ கலைவடிவங்களையும் சமகாலம் வரையான அதன் தொடர் பராமரிப்பையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் அடையாளப்படுத்தும்.