| dc.description.abstract |
இலங்கை, பல இன, மத, மொழிச் சமூகங்களைக் கொண்ட ஒரு பன்முக கலாசார நாடாகும். இந்நிலையில் பண்பாட்டுச் சுற்றுலா என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டும் பெற்றுத்தரும் ஒரு சூழல் அல்ல மாறாக அது சமூக சமய நல்லிணக்கத்திற்கான ஒருவகைப் பாலமாகவும் அமைகின்றது. ஈழத்திருநாட்டின் சிரசாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் எழில் அனைத்தையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் சமூக, பண்பாட்டு, மற்றும் ஆன்மீக ரீதியிலான ஒரு முக்கியமான தலமாக உள்ளது. அந்தவகையில் இவ்வாய்வானது பண்பாட்டுச் சுற்றுலாவும் நல்லிணக்கமும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அடிப்படையாகக்கொண்டது எனும் தலைப்பில் அமைந்துள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்துப் பண்பாட்டுச் சுற்றுலா மையமாகவும்; தமிழ் சமூகத்தின் ஆன்மீக, கலாசார, வரலாற்று அடையாளமாகவும், தமிழரின் சமய மற்றும் சமூக ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் முக்கிய மையமாகவும் விளங்குவதுடன் நல்லிணக்கத்திற்குமான ஒரு தலமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் திகழ்கின்றது என்பதனை வெளிக்கொண்டு வருவதனை நோக்கமாக கொண்டமைந்துள்ளது. ஆய்வானது விபரண ஆய்வு முறையியலுக்கு அமைவாக கட்டமைக்கப்பட்டு, தரவுகள் சேகரிப்பதற்காக களவாய்வு உத்தி முறைகளான நேர்காணல், நேரடி அவதானிப்பு, கலந்துரையாடல் மற்றும் வினாக்கொத்து என்பவற்றின் ஊடாக பெறப்பட்ட தரவுகள் உள்ளடக்கப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அந்தவகையில் இவ்வாலயம் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பிக்கையுடன் வழிபடப்படும் இடமாக மட்டுமல்லாது, இன்றைய சூழலில் அது ஒரு பண்பாட்டு சுற்றுலாவும் நல்லிணக்கமும் இணையும் தளமாக மாறியுள்ளது என்பது தெளிவானது. ஆலயம் ஆன்மிக-மதத் தளமாக மட்டுமல்லாமல், பன்முக சமூகங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையிலும் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் திருவிழாக்களில் பங்கேற்பது, உள்ளூர் சமூகத்துடன் அவர்களின் பிணைப்பை வலுப்படுத்தி, பன்னாட்டு கலாசார பரிமாற்றத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கிறது. இங்கு நடைபெறும் வருடாந்த மகோற்சவம், உள்ளுர் மக்களோடு, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் ஏனைய மக்களையும் ஈர்க்கின்ற ஒரு பெருந் திருவிழா ஆகும். இவ்விழா, இசை, நடனம், வீதியுலா, பக்திப் பஜனைகள் போன்ற பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மக்களிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, சமூக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு மேடையாக அமைகின்றன. நல்லூர் ஆலயம் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த ஊரின் பாரம்பரியத்தையும், மக்களின் வாழ்வியலையும் நேரடியாக உணரவைக்கக்கூடியதாக உள்ளதோடு இவ் அனுபவங்கள், பன்முக மக்களிடையே புரிந்துணர்வு, மதிப்பளிப்பு மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சூழல் உருவாக காரணமாகின்றன என்பதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. எனவே, நல்லூர் கந்தசுவாமி ஆலயம் பக்திப் பூர்வமான வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி, பண்பாட்டுச் சுற்றுலா, பொருளாதார முன்னேற்றம், பாரம்பரிய பரிமாற்றம் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய அனைத்தையும் இணைக்கும் பல்துறை தளமாக விளங்குகிறது என்பதே இவ்வாய்வின் பிரதான முடிவாகும். |
en_US |