| dc.description.abstract |
ஈழத்தின் தலையாய தமிழறிஞர்களுள் ஒருவராக சுவாமி விபுலாநந்தர் திகழ்கின்றார். அடிகளார் ஈழம் முதல் இமயம் வரையில் இயங்கிய அனுபவம் வாய்க்கப் பெற்றவர். விபுலாநந்தருடைய சிந்தனைகள் பல்துறை சார்ந்தனவாக விளங்குகின்றன. விபுலாநந்தர் தன்னுடைய கட்டுரைகளிலே மனம் மற்றும் நடத்தைகள் குறித்து கருத்தூன்றி அணுகியுள்ளார். விபுலாநந்தருடைய கட்டுரைகளைத் தொகுத்து வெளிவந்த தொகுதிகளாக விபுலாநந்த அமுதம், விபுலாநந்த உள்ளம், விபுலாநந்த வெள்ளம், விபுலாநந்தத் தேன், விபுலாநந்த ஆராய்வு போன்றன விளங்குகின்றன. அந்தவகையில் விபுலாநந்தர் மனித மனங்களை சரீரப்படுத்தும் எண்ணக்கருக்களை தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார். விபுலாநந்தரின் கட்டுரைகளில் மனமும் நடத்தையும் எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது மனிதனின் நடத்தையை மேம்படுத்துவதில் மனதின் அவசியத்தன்மையை விபுலாநந்தரின் கட்டுரைகளிலிருந்து வெளிக்கொண்டு வருவதையே நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. விபரண ஆய்வு மற்றும் வரலாற்று ஆய்வு முறையியல்களின் அடிப்படையில் இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒருவன் சிறந்த முறையில் மதிக்கப்படுவதற்கு அவனுடைய நடத்தையே காரணமாய் அமைகின்றது. இந்திய உளவியலில் மனிதனது மனதில் உள்ள எண்ணங்களின் வழியே அவனது நடத்தைகள் வெளிப்படுகின்றது என கருதுகிறார்கள். மனதின் உடைய வெளிப்பாடாகத் தோன்றியதே நடத்தையாகும். இந்திய சிந்தனை மரபில் வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, பதஞ்சலி, யோகசூத்திரம் போன்றன இந்திய உளவியல் சிந்தனைகளில் பெரிதும் எடுத்தாளப்பட்ட இலக்கியங்களாகும். விபுலாநந்தர் வாழ்ந்த காலச்சூழலின் பின்னணியே அடிகளாரை சமூகம் நோக்கி சிந்திக்க வைத்தது எனலாம். விபுலாநந்தர் பிறழ்வு நடத்தையினைக் கொண்ட சமூகத்தினை திருத்த வேண்டும் என எண்ணியிருந்தார். இதனால் இவரது கட்டுரைகள் மானுட நேயம், தீண்டாமை, யோகமார்க்கம், சுய உழைப்பு, ஆன்ம சக்தி, புலனடக்கம் போன்ற எண்ணக்கருக்களை வெளிப்படுத்தியிருந்தார். இவருடைய கருத்துக்களின் வழியே சமூகமானது பிறழ்வுடைய நடத்தையினை விடுத்து ஒழுக்கமுள்ள சமுதாயமாக உயர்வுபெற எண்ண வேண்டும் என நினைத்து தனது கருத்துக்களை கட்டுரைகளின் வழியே சமூகத்தினரிடையே முன்னிறுத்தியிருந்தார். |
en_US |