| dc.description.abstract |
இலங்கையில் தனித்துவமான வரலாற்றினைக்கொண்ட பிராந்தியங்களில் யாழ்ப்பாணப் பிராந்தியமும் ஒன்றாகும். கி.பி 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் குறிப்பாக 1658 இல் யாழ்ப்பாணமானது ஒல்லாந்தரது மேலாண்மையினை ஏற்றுக்கொண்டு வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி, என நிர்வாக அடிப்படையில் நான்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஒல்லாந்தக் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாக வருகை தந்த ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கரையோரப் பகுதியினை நிர்வாகப் பகுதியாக பாதுகாப்பதன் மூலம் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பினை உருவாக்கி பெரும் இலாபம் பெறலாம் எனும் முதன்மையான நோக்கத்தினைக் கொண்டிருந்தனர். இதன் பொருட்டு பொருளாதார ரீதியாக உற்பத்திப் பொருட்களை அதிகரிப்பதற்கான சுதேச ஊக்குவிப்பை வழங்கினார்கள். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நிர்வாக ரீதியாக சமூகத்தில் பல்வேறு பதவிகளும்இ சமூக ரீதியான உட்கட்டமைப்புச் செயற்பாடுகள் மற்றும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தின் தனித்துவமான அணுகுமுறை என்பன யாழ்ப்பாணக் கலாசாரத்திலும் புதிய சமூக மாற்றங்களைக் கொண்டுவந்ததினால் கி.பி 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தவிர்க்க முடியாததாயிற்று. கல்வியே சமூகத்தின் திறவுகோல் ஆகையால் கல்வியில் செலுத்தப்பட்ட கவனம் தமது சமூகம் சார்ந்த ஆதிக்கத்தை பல கோணங்களில் நிலைநாட்டவும் முயற்சிகளாக அமைந்தன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சுதேச வளங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை தனித்துவமாகப் பயன்படுத்தியவர்கள் என்ற வகையில் ஒல்லாந்தர் முக்கியம் பெறுகின்றார்கள். இவ்வாறாக சுதேச பொருளாதாரத்துக்கு ஒல்லாந்தர் முன்னுரிமை அளித்து நிர்வாக, பொருளாதார, சமூக ரீதியாக யாழ்ப்பாணச் சமூகம் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மாற்றம் ஏற்பட ஒல்லாந்தார் காரணமாகினர். எனவேதான் கி.பி 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகால யாழ்ப்பாண சமூகம் - ஓர் ஆய்வு எனும் தலைப்பானது வரலாற்று அணுகுமுறை மற்றும் விபரண ஆய்வு முறையின் மூலம் ஒல்லாந்தர்கால யாழ்ப்பாணச் சமூக நிலையினையும், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறியும் நோக்கில் இவ்வாய்வானது முதல்த்தர ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. |
en_US |