| dc.description.abstract |
கட்டடக்கலை என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை மற்றும் அழகியல் பெறுமானங்களாகவும் பண்பாட்டு இலட்சியங்களாகவும் காண்பியல் தொடர்பாடல் ஊடகமாகவும் விளங்குவதோடு ஒரு தேசத்தின் பண்பாடு, வளம், வாழ்க்கை முறையின் சின்னங்களாக உள்ளன. தென்னிந்தியத் தொடர்புகளின் விளைவாகத் திராவிடக் கட்டடக்கலைப் பாணியின் தாக்கம் இலங்கையில் உள்ள இந்துக் கோயில்களில் அவதானிக்கமுடிகின்றது. அந்தவகையில் பொலநறுவைக் காலத்தில் அமைக்கப்பட்ட சிவாலயங்கள் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றன. இவை திராவிடக் கட்டடக்கலைப் பாணியை வெளிப்படுத்தி நிற்கும் உன்னத படைப்புகளாக விளங்குகின்றன. தற்காலத்தில் இச் சிவாலயங்கள் அழிவடைந்த நிலையில் காணப்படுவதோடு கலையம்சங்கள் பராமரிக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றன. அத்துடன் சிவாலயங்களின் கட்டடக்கலை, வடிவமைப்பு, கலைமரபு என்பன அடையாளப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. அந்தவகையில் பொலநறுவையில் உள்ள சிவாலயங்களை இனங்கண்டு கட்டடக்கலை வாயிலாக வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்துவதுடன் பொலநறுவைக்காலச் சிவாலயங்களின்
கட்டடக்கலை மரபு, அதன் அம்சங்களை வெளிக்கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டு கலை வரலாற்று நோக்கில் பொலநறுவைக்காலச் சிவாலயங்கள் (கி.பி 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 13ஆம் நூற்றாண்டு வரை) எனும் தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வானது கள ஆய்வை அடிப்படையாகக்கொண்டு விபரித்துக் கூற வேண்டிய தேவை உள்ளதால் விபரண அணுகுமுறை ஊடாக மேற்கொள்ளப்படுவதோடு கலையம்சங்களை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்வதால் கலை வரலாற்று ஆய்வு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கு முதலாம் நிலைத் தரவுகளாகக் கள ஆய்வு, நேர்காணல், அவதானிப்பு என்பனவும் இரண்டாம் நிலைத்
தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், இணைய வழித்தரவுகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. பொலநறுவைச் சிவாலயங்கள் அழிவடைந்த நிலையில் காணப்பட்டிருந்தாலும் அவற்றின் கட்டட அம்சங்கள் கலை மரபை வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்கமுடிகின்றது. இத் திராவிடக் கட்டடங்களில் பிற பண்பாட்டுக் கலையம்சங்கள் காணப்படுவதுடன் தற்காலத்தில் ஆலயத்தின் சிதைவுகளைக் கொண்டும் புதிய கற்களைப் பயன்படுத்தியும் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. |
en_US |