| dc.description.abstract |
புதிய தொழில்முறைகளின் அறிமுகமானது, பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் கரையோர மீனவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அட்டைப்பண்ணைக் கைத்தொழிலின் விருத்தியினால் கரையோர மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்காணுதலை இவ்வாய்வு பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. குறித்த ஆய்வானது, யாழ்ப்பாணப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை (J/84) கிராமத்தின் மீனவர்களை அடிப்படையாகக்கொண்ட சமுதாய மட்ட ஆய்வாக உள்ளது. நோக்கம் கருதிய மாதிரியின் அடிப்படையில் கரையோர மீன்பிடியை வாழ்வாதாரமாக் கொண்ட 50 மீனவர்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பண்புசார் மற்றும் கணியம்சார் தரவுகள் இணைந்த கலப்பு முறை ஆய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு கருவிகளாக நேர்காணலை அடிப்படையாகக்கொண்ட வினாக்கொத்து, விடய ஆய்வுகள், பிரதான தகவல் வழங்குநருடனான நேர்காணல்கள், மற்றும் நேரடி அவதானம் என்பனவற்றைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. கணியம்சார் தரவுகள் சமூக விஞ்ஞானங்களுக்கான விபரணப் புள்ளிவிபரவியல் மென்பொதியினுடாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியிடங்களைச் சார்ந்த செல்வந்த முதலாளிகளின் முதலீட்டு முயற்சியினால் அமைக்கப்படும் அட்டைப்; பண்ணைகளிலிருந்து குறைந்த காலப்பகுதியில் கூடுதலான வருமானத்தை ஈட்டிக்கொள்ளப்படும் ஒரு தந்துரோபாயமாகவும் காணப்படுகிறது. இதனால் பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் தமது தொழில் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்குகின்றனர். அந்தவகையில், மீன் பிடிப்படகுகள், சிறுவள்ளங்கள் தரித்துநிற்கும் துறைப்பகுதிகளிலும் கடலுக்குச் சென்று வரும் பாதைகளிலும் அவற்றிற்கு அண்மையாகவும் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதால், கடற்றொழிலாளர்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வாதாரமாக நண்டு, இறால், மற்றும் மீன் பிடியில் ஈடுபடும் கரையோரப் பகுதிகளிலும் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதால் அவர்களின் தொழில்கள் முற்றாகப் பாதிக்கப்படுகின்றன. கரையோர கடல்வள ஆதாரங்கள் சார்ந்த வகையில், மீனினங்கள் மீன்பிடி பாடுகளுக்கு வருவது தடைப்படுதல், மீன்களின் இயற்கையான உற்பத்தி அளவு குறைவடைதல், கடல்சார் மாசடைதல், மற்றும் கடலின் இயற்கையான நீரோட்டம் திசைதிருப்பப்படுகிறது. அத்துடன் பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கும் பண்ணை உரிமையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் எதிர்ச்-சமூக நடத்தைகளும் இனங்காணப்படும் நிலையில் சூழலியல் முறைமைக் கோட்பாடு, மேலாண்மை மற்றும் சுரண்டல் கோட்பாட்டு அடிப்படைகளுடன் தொடர்புபடுத்தி விளக்கமளிக்கபட்டுள்ளது. இந்நிலையில், அட்டைப்பண்ணை கைத்தொழிலினால் மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் கரையோர வளம்சார்ந்த பாதிப்புக்கள் குறைத்தல் ஊடாக நிலைபேறான மீன்பிடியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரச, அரசார்பற்ற மற்றும் சமுதாய அமைப்புக்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய குறுகிய மற்றும் நீண்ட காலச் செயற்பாடுகள் குறித்த பரிந்துரைகளும் முன்வைக்கபட்டுள்ளன. |
en_US |