Abstract:
உலகில் உள்ள சமயங்கள் எல்லாவற்றிற்கும் தலைசிறந்ததாக விளங்குவது நம் சைவ சமயமாகும்.இது தொடக்கம் இல்லாததும் தொன்மை வாய்ந்ததும் முடிவுறு அற்று எதிர்காலம் வரைக்கும் நிலைத்திருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையோடு நெருங்கி இணைந்த சைவ சமயத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் தற்காலத்தில் தன்னிலை இழந்து வருவதை காண முடிகின்றது. இவ்வாறான காலகட்டத்தில் அறநெறி பாடசாலைகளின் பங்களிப்பு அவசியமாகின்றது. அறநெறிக் கல்வி என்பது வாழ்க்கைக்கான நல்லறத்தைப் போதிக்கும் வகையிலான இந்துநெறி சார்ந்த அறிவொழுக்கங்களைப் போதிக்கின்ற ஒரு கல்வியாகும். இலங்கையில் வாழும் ஏனைய மதப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற சமய கலாச்சார மேலதிக கல்வி இந்து சமயப் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு ஆலயங்கள் தோறும் அறநெறி பாடசாலைகள் என்ற இலட்சிய நோக்கத்தோடு 1989ஆம் ஆண்டு அறநெறிப் பாடசாலை செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தோற்றம் பெற்ற அறநெறிப் பாடசாலைகள் இளம் சிறார்கள் மத்தியில் கல்வியறிவு புகட்டல், சீரிய ஒழுக்க விழுமியங்களை விதித்தல், சமய வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்தல் போன்ற பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. குறிப்பாக வலிகாம மேற்கு பிரதேசத்தில் அறநெறிக் கல்வியின் ஆரம்பகால நிலைக்கும் சமகால நிலைக்கும் இடையிலான மாறுபாடுகளை வெளிக்கொணர்வது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது. இவ்வாய்வின் முதல் நிலை மூலங்களாக கள ஆய்வு
உத்திமுறைகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் அறநெறி பாடசாலைகள் இயங்கும் சந்தர்ப்பத்தில் நேரடி அவதானிப்புகளும் மற்றும் நேர்காணல்களும் இதனுள் அடங்குகின்றன. துணை மூலங்களாக இவ்வாய்வுடன் சம்பந்தப்பட்ட நூல்கள், ஆய்வேடுகள், சஞ்சிகைகள், இதழ்கள், இணையத்தளங்கள் மற்றும் காணொளி ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்கள் துணைநிலை மூலங்களாக கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வானது வரலாற்றியல் விபரண மற்றும் ஒப்பிட்டு ஆய்வு முறையியல் ஊடாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு உத்திமுறை மூலம் பெறப்பட்ட தரவுகள் உள்ளடக்க பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.