| dc.description.abstract |
இவ் ஆய்வானது கண்டாவளைப் பிரதேசத்தை ஆய்வுப் பரபபாகக் கொண்டு மதமாற்றத்தை (Conversion) உளவியல் நோக்கில் ஆராய்கின்றது. மதமாற்றத்தை உளவியல் நோக்கில் ஆராய்வது என்பது, தனிநபரின் மனோபாவம், உணர்வுகள், அறிவாற்றல் செயற்பாடுகள் மற்றும் சமூகத் தொடர்புகள் எவ்வாறு இந்த மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாகும். பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையில் வலுவடைந்த மதமாற்றச் செயற்பாடுகள் சமகால இயங்கியலில் பிரச்சனைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. எனவே கண்டாவளைப் பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் மதமாற்ற செயற்பாடுகளுக்கான உளவியல் காரணங்கள் எத்தகையன என்பது குறித்து தெளிவுபடுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இங்கு ஆய்வு எல்லையாக கண்டாவளைப் பிரதேசமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. விபரண ஆய்வு, பகுப்பாய்வு, வரலாற்று முறை ஆய்வு என்பவற்றினையும், இங்கு நேர்காணல், வினாக்கொத்து, கலந்துரையாடல், பிரதேச சபை அறிக்கைகள் முதலியவற்றோடு களாய்வு முறை மூலமும் தரவு சேகரிக்கப்பட்டுள்ளது. குடும்பச் சூழல், வறுமை, சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகள், நோய் நிலைமை, திருமணம் போன்ற காரணிகள் மதமாற்றத்திற்கு அடிப்படையாக உள்ளன. ஒருவர் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி நிலைகளால் பலவீனமுற்று இருக்கின்ற சந்தர்ப்பங்களில் மன அழுத்தம், வெறுப்பு நம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பாண்மை போன்ற மனநிலை குறித்துத் தடுமாற்றம் ஏற்படுகின்ற நிலை காணப்படுகின்றது. இவற்றை வாய்ப்பாக கொண்டு மதமாற்றிகளால் மூளைச்சலவை செய்தல், கருத்தேற்றம் செய்தல், உள்ளத்தை கட்டுப்படுத்தல் முதலிய உளவியல் உபாயங்களின் அடிப்படையில் மதமாற்றச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கண்டாவளைப் பிரதேசத்தில் மதமாற்றத்தின் உளவியல் தாக்கங்களை புரிந்து கொள்ள உதவுவதோடு மதமாற்றம் தொடர்பான எதிர்கால ஆராய்ச்சிகளுக்கும் இவ் ஆய்வு ஒரு அடித்தளமாக அமையும். |
en_US |