Abstract:
சமகால கலை இயக்கத்தில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் தாபனக் கலையானது (installation art) 1970களில் மேலைத்தேயத்தில் உருவான நவீனத்துவக் கலைவடிவங்களில் ஒன்றாகும். இது இன்று தேச எல்லைகளைக் கடந்து, பல்வேறு கலாசார மற்றும் அரசியல் சூழல்களில் கலைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது. சமூகப் பிரச்சினைகள், அரசியல், சுற்றுச்சூழல் அக்கறை மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம் போன்ற உலகளாவிய விடயங்களை உரையாடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இது இன்று திகழ்கிறது. பார்வையாளர்களை நேரடியாக ஈடுபடுத்தும் தன்மை, பொதுவெளியை கலைக்கான களமாக மாற்றுவது மற்றும் பல்லூடகப் பயன்பாடு ஆகியவை உலகளாவிய ரீதியில் தாபனக்கலைக்கு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. இலங்கையில் தாபனக்கலையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ஒரு படிப்படியான செயல்முறையாகும். 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் சிக்கல்கள், குறிப்பாக இனப்பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட வன்முறைகள், கலைஞர்களுக்கு புதிய வெளிப்பாட்டு முறைகளைத் தேடத் தூண்டின. இந்த அனுபவங்களை வெளிப்படுத்த மரபுசார் ஓவியம் மற்றும் சிற்பம் போன்ற வடிவங்கள் போதுமானதாக இல்லை என்று அவர்கள் உணர்ந்தனர.; கலைஞர்கள் தமது கருத்துக்களை மிகவும் தீவிரமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தக்கூடிய ஊடகங்களைத் தேட ஆரம்பித்ததன் விளைவாக ஒளிப்படக்கலை. நிகழ்த்துகலை மற்றும் தாபனக்கலை போன்ற புதிய வடிவங்கள் பிரபலமடைந்தன. உலகளாவிய கலைப் போக்குகளுடனான தொடர்பு இலங்கைக் கலைஞர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. சர்வதேசக் கலை காட்சிகள் மற்றும் கலைஞர்களுடனான பரிமாற்றங்கள் தாபனக்கலையின் சாத்தியக்கூறுகளை மேலும் அகலித்தன. இலங்கையில் உள்ள கலைக் கல்வி நிறுவனங்கள் நவீன கலை வடிவங்களை ஊக்குவிக்கத் தொடங்கின. இதன் விளைவாக, இளம் கலைஞர்கள் தாபனக்கலையை ஒரு முக்கிய வெளிப்பாட்டு ஊடகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1990 ஆம் ஆண்டுகளில் இக்கலை வடிவமானது இலங்கையில் ஆரம்பமானதாகக் குறிப்பிடப்படினும் இக்கலை வடிவத்தை முன்னிலைப்படுத்தும் ஆய்வுகள் பெரிய அளவில் வெளிவரவில்லை. இதனடிப்படையில் பின்வரும் வினாக்களினூடு இலங்கையில் தாபனக்கலையின் சமூக அரசியல் வரலாற்றை தொகுத்து வாசிக்க இவ்வாய்வானது முயல்கிறது: உலகளாவிய ரீதியில் தாபனக்கலையின் முக்கியத்துவத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? இலங்கையில் தாபனக்கலையின் எழுச்சிக்கான வரலாற்றுப் பின்னணியினை எவ்வாறு வரையறுப்பது? இலங்கையில் கலை வரலாற்று ரீதியாக முக்கியமான தாபனக்கலைப் படைப்புகள் எவ்வாறு வடிவம் மற்றும் கருப்பொருள் சார்ந்து ஒழுங்குபடுத்தப்படுகின்றன? தாபனக் கலைப் படைப்புக்களின் மீதான பார்வையாளர்களின் எதிர்வினையினை எவ்வாறு விளங்கிக்கொள்வது? இலங்கையில் தாபனக்கலைப் படைப்புகளின் உருவாக்கத்தில் அவற்றுக்கு ஊக்கமளிப்பதில் பின்புலமான நிறுவனங்கள் மற்றும் செயற்பாடுகள் எத்தகைய பங்களிப்பினைச் செய்கின்றன? அரசியல் ரீதியில் எவ்வாறு இலங்கையில் தாபனக்கலை படைப்புகள் அர்த்தம் கொள்ளப்படுகின்றன? படைப்புகளை முதலாம் நிலைத்தரவுகளாகக்கொண்டு விளக்கவியல் ஆய்வு முறையைப் பின்பற்றி உருவ உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையினூடு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கலையின்சமூகவரலாற்று அணுகுமுறையில் முடிவுகள் முன்வைக்கப்படுகின்றன. முடிவாக இலங்கைக் கலையில் சமகால அரசியல், சமூகப் பிரச்சினைகளை பேசுவதற்காக தாபனக்கலை வடிவமானது உள்ளூர்மயமாகின்றது.