Abstract:
"ஒரு தனிமனிதனாக மாத்திரமன்றி, ஒரு நல்ல பிரஜையாக இருக்கவும், தன்னைப் பற்றி மாத்திரமல்லாது, சமுதாயம் சார்ந்து சிந்திக்கவும், நடந்து கொள்ளவும், செயற்படவும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது அவசியமாகும். நவீன வாழ்க்கையினது சிக்கலான அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பின்னணியைப் புரிந்து கொள்ளக் கூடிய தன்மையும், சமூகத்திற்கும் தேசத்திற்கும் கடமை செய்யும் உணர்வும் ஒருவரை ஒரு நல்ல குடிமகனாக்குகின்றது. சமூகத்தின் நல்வாழ்வு என்பது கூட்டு நோக்கங்கள் பற்றிய சரியான தேர்விலேயே தங்கி இருக்கின்றது. அவையாவன: அரசியற் கொள்கை, கூட்டு இயக்கத்துக்கான பொறிமுறையின் செயற்றிறன், அரசியல் அரசாங்கம். ஜனநாயகத்தினைத் தோல்வி அடைய விடாது பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய ஒவ்வொரு குடிமகன் மீதும் உள்ளது. ஒரு கொள்கையின் திசை தொடர்பான உண்மையான விடயங்கள் பற்றிய அறிவினை அவர் கொண்டிருப்பதோடு, நோக்கங்கள் மற்றும் சிக்கல்களை மதிப்பிடுவதற்கான விவேகமும் அவருக்கு இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இல்லாத பட்சத்தில், தேசத்தின் தலைவிதி சரியான தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதனை யாராலும் உத்தரவாதப்படுத்த முடியாது. இதன் காரணமாகப் பாடசாலைகள் மீது ஒரு முக்கியமான பொறுப்பு சுமத்தப்படுகிறது. பாடசாலைகள் இந்தத் தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில், கல்வி முறைமையானது திட்டமிடப்படல் வேண்டும். பாடசாலைகள் பாகுபாட்டினை உருவாக்கும் அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்றாலும், தேசத்தின் இளைஞர்களினது அரசியற் கல்விக்கான பொறுப்பிலே அவற்றுக்கு இருக்கும் பங்கினை அவை ஏற்க வேண்டும்".