| dc.description.abstract |
இலங்கையில் தமிழ், சிங்களப் பகுதிகளில் பத்தினி / கண்ணகி வழிபாட்டுடன் இணைந்ததாகக் காணப்படுகின்ற ஒரு சடங்குசார் நிகழ்வே கொம்புமுறி நிகழ்த்துகை. இதனைச் சிங்களப் பகுதிகளில் 'அங்கெலிய' என அழைக்கின்றனர். இந்நிகழ்த்துகையின் தோற்றம் குறித்துத் திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலையே உள்ளது. தற்போது இந்நிகழ்த்துகை சிங்களப் பகுதிகளில் வழக்கொழிந்து போனநிலையில், தமிழர் பகுதிகளில், குறிப்பாகக் கிழக்கிலங்கையில் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. முன்னர், கிழக்கிலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு இருந்தாலும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் பாணமை, தம்பிலுவில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை, சித்தாண்டி, திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வருகின்றது. பாணமை தவிர ஏனைய இடங்களில் யுத்தம் மற்றும் சமூகக் காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்நிகழ்த்துகை, அண்மைக் காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக நிகழ்த்தப் பட்டு வருகின்றது. இவ்விடங்களில் நிகழ்த்தப்படும் நிகழ்த்துகைக்கான அடிப்படை ஒன்றாக உள்ள போதிலும் நிகழ்த்தப்படும் முறைமை, புராணக்கதை போன்றவற்றில் சில வேறுபாடுகளைக்
கொண்டிருக்கின்றன. கொம்புமுறி நிகழ்வு வெறுமனே ஒரு சடங்குசார் நிகழ்த்துகை மட்டுமல்ல. அது குறியீட்டுத்தன்மையானது. நிகழ்த்துகின்ற மக்களின் உளவெளிப்பாட்டினைப் பிரதிபலிப்பது. அவர்களிடம் காணப்படுகின்ற முரண்பாடுகள், உறவுநிலைகள், சமூக, அரசியல் நிலைமைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான கருவியாக இது அமைகின்றது. இதனாலேயே இடத்துக்கிடம் தோற்றக்கதைகளும், நிகழ்த்துகைகளும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இப்பின்னணியில் நோக்குகையில், இந்நிகழ்த்துகை பற்றிய தோற்றக்கதைகள், பொதுவாக, கோவலன்-கண்ணகி /பத்தினி- பாலங்காவுடன் தொடர்புடையதாக இருக்க, திருகோணமலை பள்ளிக்குடியிருப்பில் மட்டும் சிவன் - பார்வதியுடன் இணைத்துக்
கூறப்படுவது கவனத்துக்குரியது. நீண்ட காலமாகக் கண்ணகி / பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்த கொம்புமுறி நிகழ்த்துகை, எவ்வாறு சிவன் - பார்வதி சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றமடைந்தது? என்ற அடிப்படைக் கேள்விக்கான விடையினை இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது. |
en_US |