Abstract:
கலை வரலாறு என்ற கற்கைப்புலமானது விசாரணையின் பொருளாகவும் வழிமுறையாகவும் காட்சியைக் கொள்கின்ற காட்சிசார் அறிவில் நிலைகொண்டுள்ளது. இது மனித உள்ளடக்கத்தின் மேலான மற்றும் தொடர்ச்சியான வெளிப்பாடாக கலை அமைகிறது என்பதை விசாரணை செய்கிறது. கலை வரலாறு காண்பியக்கலைகளின் உற்பத்தி அனுபவம், நுகர்ச்சி என்பவற்றின் வரலாற்றை ஆராய்கிறது. இவ்வாய்வுக் கட்டுரையானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் நுண் கலைத்துறையின் 'நுண்கலை' என அறியப்பட்ட கலை வரலாற்றுக் கற்கை நெறியின் பாடத்திட்டத்தில் கடந்த நான்கு சகாப்தங்களாக ஏற்பட்ட மாற்றங்களை அவற்றுடன் சம்பந்தப்பட்ட உள்ளூர்ப் பண்பாட்டு அரசியல் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் இதையொத்த பாடநெறிகளின் பாடத் திட்டத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் என்பனவற்றின் பின்னணியில் வாசிக்க முயல்கிறது. பாடத் திட்டத்தின் பாடப்பரப்பு, கோட்பாட்டுச் சட்டகங்கள் அணுகுமுறைகள், ஆய்வு முறை மற்றும் முறையியலின் அடிப்படையில் காலனியத்தினூடு தென்னாசியாவிற்கு அறிமுகமான
கலை வரலாறு என்ற கற்கைப் புலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்கொண்ட சவால்கள் எதிர்வினைகள், தன்வயப்படுத்தல்கள், மாற்றங்கள் என்பவற்றை இது ஆராய்கிறது. நுண் கலைத்துறையின் ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகள், பாடத்திட்டங்கள், கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் வெளியீடுகள், கற்கைநெறி மதிப்பீட்டு அறிக்கைகள்; மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூக வரலாற்று அணுகுமுறையினூடான வாசிப்பாக இது அமைகிறது