| dc.description.abstract |
சமயம் என்பதனை ஆங்கிலத்தில் ‘றிலிஜன்’ என்பர். இந்தச்சொல்
நுணுக்கமாகக் கையாளப்பட வேண்டியது எனும் பொருளுடையது. மனிதன் சமூக
இசைவாக்கத்துடனும், விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டியவன் என்பதை
அடிப்படையாகக் கொண்டே சமயம் என்ற சொல்லானது பன்மைத்துவ சமூகத்தில்
மேனிலை பெறுகின்றது. இதனடிப்படையில் சமயம் என்ற சொல்லானது 'சமயோசிதம்"
என்பதுடன் தொடர்புபட்டுவருகிறது. சொற்பொருள் விளக்க அடிப்படையில் பார்த்தால்,
'சம" என்பதன் அடியாக வந்து சமத்துவத்தை ஏற்படுத்தும் கொள்கையுடையது
சமயமெனலாம். ஏற்றத்தாழ்வற்ற வாழ்வுக்கு, ஆளகத்தொடர்புஇ ஆளிடைத்தொடர்பு
மூலம் முறையே மனிதன் தான் பக்குவப்பட்டும் ஏனையோரைப் பக்குவப்படுத்தியும்
வாழ வேண்டியுள்ளது. இப்பகைப்புலத்திலிருந்துதான் ‘பண்பாடு’ பிறக்கின்றது.
இஸ்லாத்தின் கருத்துப்படி பூமியில் இறைவன் மனிதர்களை ஒவ்வொரு வடிவமுள்ள
முகத்துடன் படைத்தது பிரிந்து வாழாமல் புரிந்து வாழ்வதற்காகும். எனவே மனிதன் தான் வாழ்வாங்கு வாழ்ந்து, மற்றவரையும் வாழவைத்து மேநிலைபெறச் செய்வதற்காக
‘சமயமும் பண்பாடும்’ உதவுகின்றன எனும் அடிப்படையில் இவ்வாய்வு அமைகின்றது.
இந்த ஆய்வின் ஆய்வுப் பரப்பாக யாழ்ப்பாணப் பிரதேச மதங்கள் அமைகின்றன.
பல இன மத (இசுலாம், கிறித்தவ, இந்து, பௌத்த) மக்கள் வாழுகின்ற ஓரு
பிரதேசத்தில் அவரவர் தத்தமது மத ஆளுமையுடனும், ஏனைய மதங்கள் மீதான
மதிப்புணர்வுடனும் நடந்துகொள்வது நல்லிணக்க வாழ்விற்கு உதவும். ஆனால்,
நடைமுறையில் தத்தமது சமயநெறிப்படி வாழாமையும், ஏனைய சமயங்கள்
தொடர்பான வெறுப்புணர்வும் இவ்வாய்வின் ஆய்வுப் பிரச்சினையாகின்றது. சமயங்கள்
தனியாளையும் சமூகத்தையும் இணைப்பதற்காகத் தோன்றின என்ற அடிப்படையில்
ஒவ்வொருவரும் ஏனைய சமயங்கள் மீது மதிப்பு வைத்து நடப்பது சமூக ஒற்றுமையை
ஏற்படுத்தும். கொல்லாமை, சமத்துவக் கொள்கை, அறியாமையினைப் போக்குதல்
முதலான அம்சங்களைக் கொண்டு விளங்கிய சமண, பௌத்த சமயச் செயற்பாடுகளால்
இந்துமதம் காலத்துக்கேற்றவாறு தன்னைச் சீர்படுத்தியிருக்கின்றது. சகோதரத்துவத்தை
ஒரு வாழ்வியல் அம்சமாகக்கொண்ட இஸ்லாம் சமத்துவப்பாதைக்கு நல்ல
ஆதர்சமாகும். இலங்கை வரலாற்றில் றோமன் கத்தோலிக்கரதும், தொடர்ந்து வந்த
ஒல்லாந்தர், ஆங்கிலேயர் மூலமான புரட்டஸ்தாந்து, கிறிஸ்தவரதும் தொடர்பால்
முறையியல் சார்ந்த கல்வி மூலமாகப் பெருநன்மையினை இலங்கைச் சைவர்களும்
பெற்றார்கள். அன்பு, அகிம்சை முதலான மனித விழுமியப்பண்புகளை கிறிஸ்தவ
சமயமும் கொண்டிருந்தது. றோமன் கத்தோலிக்கரைப் பொறுத்தவரை அவர்கள்
யாழ்ப்பாணத்திலே சைவ சமயத்தவர்களுடன் நெருக்கமாக வாழ்வதால், இந்துசமய
நடைமுறைகளுடன் தொடர்புபட்டவகையில் இவர்களது வழிபாட்டுமுறைகள்
காணப்படுகின்றன. இவ்வாய்வின் முதன்மை நோக்கமாக. 'கடவுள் ஒருவர்"
என்பதையும், அவரைச் சார்ந்து வாழ்வதற்கான வழிகள்தான் பல என்பதையும்
உணர்ந்து அந்த நெறிகளை வளர்க்கும் உபாயப் பண்பினை அறிதலுடன் துணை
நோக்கங்களாக, சமயங்களில் மனிதவிழுமியத்திற்கு மாறான எதிர்மறைச்
செயற்பாடுகளைக் களைந்து எல்லோரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள்
என்ற கருணையுணர்வோடு தனித்த, பன்மைத்துவ நிலையில் இயன்றவரை
சகவாழ்விற்கு அரவணைத்து செல்லுதல் என்பதாக அமைகின்றது. இது பண்புசார்
ஆய்வாகக் காணப்படுவதால் வரலாற்று முறை, ஒப்பீட்டு முறை, விபரண முறை
போன்ற ஆய்வு முறையியல்கள் இந்த ஆய்விலே பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வின்
மூலமாகப் பெறப்படுகின்ற பயன்களாக சமய விழுமியங்களை அனைவரும் பகிர்ந்து
கொள்ளும் வகையில் சமயத்தின் நடைமுறைகள் இருப்பதோடு, சமயங்களில் சமூக
முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்ள செயற்பாடுகளும் நீக்கப்படுதல் வேண்டும்.
அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்க இறைவனைப் பிரார்த்தனை செய்வதன்மூலம்
ஒவ்வொருவரும் அன்புடன் உயரிய வாழ்வு வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகும். |
en_US |