| dc.description.abstract |
இலக்கியம் 'இலக்கு' என்பதனை அடிப்படையாகக் கொண்டது. எமது வாழ்வின் நோக்கம் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதாகும். அந்த விடுதலை இறுதியில் இறைவனை அடைவதாகவும் சொல்லப்படும் இந்த ஆன்ம விடுதலைக்கான உயரிய நெறியைச் சாதாரண மக்களுக்கு ஏற்ற வகையிலே இலக்கியச்சுவை கலந்து கூறுகின்ற பொழுது அதனை மக்கள் விரும்பிப்படித்து அதன் வழி நடந்து உயரிய நிலையை எய்துவர் இவற்றை ஈழத்துப் புலமையாளர் ஒருவர் தாம் சார்ந்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சமயநெறியில் நின்று விளக்கிக் காட்ட முனைந்திருக்கின்றார். போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலப்பகுதியான கி. பி.1621 – 1658 இல் வாழ்ந்திருக்கிறார். வண. சுவாமி ஞானப்பிரகாசர் இந்த இலக்கியம் எழுந்த காலத்தை கி.பி.1642 என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். பெயர் குறிப்பிடப்படாத இந்த ஞானப்பள்ளுவின் ஆசிரியர் தன்புகழை விரும்பாத பரந்த நோக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். அவரது நோக்கம் அல்லற்படுகின்ற மக்களை கிறிஸ்தவ இறையருளை முன்னிறுத்தி மேநிலை அடையச் செய்வதே ஆகும். அதற்காக அவர் பெருங் காவியங்கள், புராணங்கள் முதலான பாரம்பரிய இலக்கிய வடிவங்களைத் தேர்ந்தெடுக்காது, சாதாரணமான பொதுமக்களுக்கு ஏற்றதான இலக்கிய வடிவங்களில் ஒன்றான 'பள்ளு' என்று சொல்லப் பெறுகின்ற சிற்றிலக்கிய வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். பள்ளு, குறவஞ்சி முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் 19ம், 20ம் நூற்றாண்டில் தோன்றிய நவீன இலக்கிய வடிவங்களிற்கு முன்னோடி என்று கூறப்படுகின்றது. நவீன இலக்கிய வடிவங்களில் பொது மக்களுடைய நலன்கள் பிரதானமான இடத்தைப் பெறுகின்றன. சமூகத்தில் பெரும்பான்மையினரான பொதுமக்கள் மீது மிகுந்த கரிசணை கொண்டவர்களாக ஐரோப்பியர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த ஐரோப்பியர்களின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவர்களாக இலங்கையிலே போர்த்துக்கேயர்கள் விளங்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலே நாயக்கர் ஆட்சிபுரிந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேயர் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு வகையான பாடசாலைகளை நிறுவி கல்விப்பணி புரிந்திருக்கிறார்கள். அவர்களது கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பரிஷ் என்று சொல்லப்பெறுகின்ற ஆரம்ப பாடசாலைகளில் சுதேச மொழிகளைக் கற்பித்திருக்கிறார்கள். எனவே அவர்களின் கல்விப்பணி சமூகத்தின் அடிமட்ட நிலையிலுள்ள மக்களில் இருந்து கல்லூரிக்கல்வியினை நோக்கியதான வளர்ச்சியைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. மக்களின் உண்மையான கல்வி வளர்ச்சி என்பது மரபினை மீறியதாத இருந்து விட முடியாது. மரபினைத்தழுவியே செல்வதுதான் பயன்உறுதி மிக்கதாக இருக்கும். தமிழருடைய தமிழ்க் கல்விப்பாரம்பரியத்திலே இலக்கியக்களிற்கு முக்கியமான இடம் இருக்கின்றது.
இலக்கியங்கள் பண்டு தொட்டு இன்று வரை அவர்களுடைய கல்வி அறிவை விருத்தி செய்து அவர்களை நன்நெறிப்படுத்தி இருக்கின்றது. காலத்திற்குக்காலம் தோன்றிய தமிழ்ப்புலமையாளர்கள் முன்னோர்ப் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றி இருக்கிறார்கள். இந்த வகையில் இலங்கையின் போர்த்துக்கேயர் காலத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் நமக்கு முன்னர் ஈழத்திலே தோன்றிய இலக்கிய வடிவமான 'பள்ளு' என்பதனை தேர்ந்தெடுத்து இலக்கியம் செய்திருக்கிறார். இலங்கையில் தோன்றிய ஞானப்பள்ளுவிற்கு முன்னோடியான பெருமை கதிரைமலைப்பள்ளு என்பதாகக் கூறப்படுகின்றது. இந்த கதிரைமலைப்பள்ளுவின் ஆசிரியர் பெயரும் அறியுமாறில்லை. கதிரைமலைப்பள்ளுவின் பாட்டுடைத்தலைவர் கதிர்காமவேலவர் ஆவார். எனவே அந்தப்பள்ளுவின் வழியிலே ஞானப்பள்ளுவின் பாட்டுடைத் தலைவராக ஜேசுக் கிறிஸ்து நாதரை ஞானப்பள்ளுவின் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்து சமயத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று படிநிலைகள் பற்றிப்பேசப்படுகின்றது. இவற்றிலே ஞானந்தான் உயர்ந்தது. கிறிஸ்தவ சமயத்திலே 'ஞானம்' என்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அது அல்லல்படுகின்ற மக்களிற்கு ஒளியாக விளங்குவது. ஞான ஒளி என்று கிறிஸ்தவர் இதனைக் கூறுவார்கள். ஞானப்பள்ளுவில் ஞானமே முன்னிறுத்தப்படுகின்றது. மக்கள் வாழ்க்கை இன்பதுன்பங்களை உள்ளடக்கியது. வாழ்க்கையை நிராகரித்தும் ஞானநெறியைக் காட்டுகின்ற சமயங்கள் உள்ளன. உண்மையான சமயம் என்பது வாழ்க்கை பற்றிய நோக்கையும் வாழும் நெறியினையும் கொண்டதாக அமைதல் வேண்டும். ஞானப்பள்ளு இலக்கியத்தைப் படிப்பவர்கள் அதில் இவ்விரண்டு அம்சங்களும் போதிந்துள்ளமையை உணரத்தவரார். தமிழில் எழுந்த இலக்கியங்கள் பல உணர்வும் அறிவும் கலந்தனவாகக் காணப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இலக்கியங்களில் உணர்ச்சி என்பது கூடுதலான பங்கை வகிக்கக் காண்கிறோம். ஆனால் ஞானப்பள்ளு அவ்வாறான ஒன்றல்ல. உணர்வின் வழி நடப்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு 'சோக நாடகம்' என்பதனையும் அறிவின் வழிநடப்பவர்களுக்கு அது ஒரு பயன்மிக்க நாடகம் என்பதனையும் ஞானப்பள்ளு ஆசிரியர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது அதனை முழுமையான படிப்பவர்களிற்கு விளங்கும். ஞானப்பள்ளிலே சிருங்காரம் என்று சொல்லப்படுகின்ற உவகைச்சுவையிலும் பார்க்க அறிவிற்கும் மேம்பட்டதான ஞானம் என்பது முக்கியத்துவப் படுத்தப்படுவதனைக் காண்கின்றோம். இதிலே இடம்பெறுகின்ற 'அறிவுறுத்தல்' எனும் பகுதிகள் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. |
en_US |