Abstract:
தந்தை, மகன், தூயஆவியார் எனும் மூன்று இறையாட்களின் பிணைப்பாலும் அன்புறவாலும் உருவானதே திருஅவை. இப்பிணைப்பே கிறீஸ்துவை பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் சமூக ஒன்றிணைவை போதிக்கின்ற அடிப்படையாக உள்ளது. தந்தை, மகன், தூயஆவியாரின் பெயரால் செபிக்கின்ற ஒவ்வொரு கத்தோலிக்கனும் இவ் சமூக ஒன்றிணைவின் அடிப்படை அங்கமாகிறான். இன்றைய காலச்சூழலில் முழு மனிதகுலமும் மத சாதி இன நிற வர்க்க வேறுபாடுகளால் பல துண்டங்களாக தனித்தனி துருவங்களாக தங்கள் தங்கள் இயல்புகளோடு இயங்கி வருவது வேதனை தருவதாக இருக்கிறது. இவ்வாறான இன்றைய சூழலில் ஈழத்தமிழர்களாகிய எங்களுடைய வாழ்வும் சாதிகளாலும் ஊர் பாகுபாட்டாலும் வர்க்க பாகுபாட்டாலும் ஏன் இன, மொழி, மத வேறுபாடுகளாலும் பிரிவுபட்டு துருவங்களாக இருப்பதை காண்கிறோம். போருக்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் அதிகம் மனிதர்கள் தனித்து வாழ்வதற்கும் இல்லையேல் தனித்தனி துருவங்களாக தங்களை சுற்றி தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த சூழலில் குழுமவாழ்வும் கூட்டுவாழ்வும் சமூக ஒன்றிணைவும் எவ்வளவு முக்கியமானதென்பதை உணர்ந்த எமது மூதாதையர் பல்வேறு வகைகளில் சமூக ஒன்றிணைவை பேண முயன்றனர். அவற்றுள் ஒன்றாகிய போர்த்துக்கேயரது வரவோடு இலங்கையில் பரவ ஆரம்பித்த கத்தோலிக்க மதம் கொண்டு வந்த பாசோ என்னும் உடக்கு பாஸ்கு நிகழ்வின் பின்னணியில் எவ்வாறு சமூக ஒருங்கிணைவு இழையோடுகிறது என்பதை இவ்வாய்வுரை முன்வைக்கிறது. கீழைத்தேச அரங்க மரபுகளில் உடக்குகளை (பொம்மைகளை) பயன்படுத்தி ஆற்றுகை நிகழ்த்தி காட்டுவது என்பது பரம்பரை வழக்காற்றினூடாக கடத்தப்பட்டு வருகின்ற ஒன்று. கீழைத்தேசங்களில் மறைபரப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த மிசனறிமார்கள் தங்கள் மறைபரப்பு பணிக்காக முக்கிய இரு வழிகளை கையாண்டனர். ஒன்று கல்விச் சாலைகளை அமைத்து மறையை பரப்புதல் மற்றையது கலைப்படைப்புகளுக்கூடாக மறையை பரப்புவது. கலைப்படைப்புக் கூடாக மறைபரப்பும் முயற்சிகளில் தோற்றம் பெற்றதே இந்த உடக்கு பாஸ்கு எனும் ஆற்றுகை வடிவம். இன்று யாழ்நகரில் காணப்படும் குருநகர் புனித. யாகப்பர் ஆலயம், புனித. மரியன்னை பேராலயம். மவுண் கார்மேல் ஆலயம் ஆகிய ஆலயங்களில் தவக்காலத்தில் கிறிஸ்துவின் பாடுகளை வெளிப்படுத்தும் உடக்குகளால் ஆன காட்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. யாக்கோமே கொன்சாலஸ் அடிகளால் எழுதப்பட்டு, பசாம் சாதாரணமாக அழைக்கப்படும் வியாகுல பிரசங்கங்கள் இராகமாக பின்னணியில் பாடப்பட அப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப இக்காட்சி பக்தி ரசம் ததும்புவதாக நடாத்தப்படும். ஆயினும் கடந்த காலத்தில் யாழ் கோட்டையை அண்மிய பகுதியில் நாவாந்துறை மக்களால் ஆரம்பிக்கப்பட்டு அடைக்கல அன்னை ஆலயம் புனித யுவானியார் ஆலயம், குருநகர் புனித. யாகப்பர் ஆலயம், மவுண் கார்மேல் ஆலயம் பேராலயம் ஆகிய பங்குகளைச் சேர்ந்த மக்களின் பங்களிப்போடு குருநகர் பகுதியில் காணப்பட்ட உப்புமாவெளியில் முடிவடைவதான பாரியதொரு திருப்பாடுகளின் நிகழ்வாக இச்சடங்கு நடாத்தப்பட்டு வந்தது. மேற்சொல்லப்பட்ட பங்குகளைச் சேர்ந்த பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு களமாக இந்த உடக்குபாஸ் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இவ்வாறு சிறந்ததொரு சமூக ஒருங்கிணைவின் களமாக விளங்கிய இந்நிகழ்வை ஆய்வுக்குட்படுத்தி அந்நிகழ்வின் சிறப்புப்பண்புகள், அவை வழக்கொழிந்த காரணங்கள், மீள உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி அறிய முயலும் ஒரு தேடலாக இந்த ஆய்வு அமைகிறது. நேர்காணல் முறையே முக்கிய தகவல் சேகரிப்பு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுப் பகுப்பாய்வு முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.