Abstract:
ஈழத்துத் தமிழர்களின் கலை வடிவங்களுள் கூத்துக் கலைகள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும். பலவிதமான கூத்துக்கள் ஈழத்தமிழர்களால் ஆடப்பட்டு வந்தாலும் கத்தோலிக்க மக்களின் கூத்து முறைமைகளுள் தென்மோடிக் கூத்தானது முக்கியமான ஆற்றுகை வடிவமாக இருந்து வந்துள்ளது. கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்கள் புனிதர்களான வேதசாட்சிகளின் வரலாறுகளையும் இறையியல் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டன. இறைபக்தி கொண்ட மக்களால் அவை பெரிதும் விரும்பப்பட்டன. இதனால் கத்தோலிக்க மரபுகளும் இறையியலும் பொதுமக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டன. மேலும் அவற்றின் வழி கிறிஸ்தவ மனிதநேய கருத்துக்கள் பெரிதும் வெளிப்பட்டு மக்களின் வாழ்வை பண்படுத்தி வந்தன. எனினும் தற்காலத்தில் வேதசாட்சிகளின் வரலாறுகள் கூறும் தென்மோடிக் கூத்துக்கள் அரிதாகவே நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறான நாட்டுக் கூத்துக்களின் ஊடாக வேத சாட்சிகளை நேரில் கண்ட உணர்வைப் பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர் எனலாம். எனவே நாட்டுக் கூத்துக்களால் கத்தோலிக்கம் வளர்க்கப்பட்டது ஒரு கிறிஸ்தவ மனிதநேய பண்பாடும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமேதும் இல்லை. ஒவ்வொரு ஆலயத்தின் பெருநாள் கொண்டாட்ட நிறைவில் கூத்தாடும் மரபு யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏராளமான கிராமங்களில் இருந்து வந்தது. மறைபரப்புப் பணியை நாட்டுக்கூத்துக்கள் செவ்வனே நிகழ்த்தி வந்த போதும் அவை செழுமையான தமிழர் கலைவடிவமாகவும் வளர்ச்சி கண்டது எனலாம். குறிப்பாகச் சிறந்த கத்தோலிக்க இலக்கியமாகவும் இந்த நாட்டுக் கூத்துக்கள் இலக்கியவாதிகளால் கணிக்கப்பட்டன. அத்துடன் மிகவும் இனிமையான பாடல்களும் ஆடல்களும் அழகான ஒப்பனைகளும் கொண்டமைந்த இந்த அரங்கானது கத்தோலிக்க மக்களின் பிரதான பொழுதுபோக்குக் கலைவடிவமாகவும் அவர்கள் மனங்களில் இடம்பிடித்துக் கொண்டது. எனினும் கடந்த காலத்தில் நடைபெற்ற தமிழின விடுதலைப் போராட்டத்தால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும் புலம் பெயர்வுகளும் ஈழத்தமிழர்களின் அனைத்து விதமான கலைகளிலும் பெரும் தாக்கம் செலுத்தி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அத்துடன் தமிழகத்தின் தமிழ்த் திரைப்படங்களும் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்வுகளும் பொதுமக்களை அவரவர் வீட்டிற்குள் முடக்கி வைத்திருப்பதும் மரபுக் கலை வளர்ச்சியில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகின்றது எனலாம். ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் மாறி வரும் உலகில் கலைகளைப் புதுமைப் படுத்த முயல்வோர் ஒவ்வொரு கலையின் அடிப்படை மரபுகளையும் தகர்த்துக் கலைகளின் புனிதத்தைக் கேள்விக் குறியாக்கி வருகின்றனர். நாட்டுக் கூத்துக் கலையும் தற்காலத்தில் இவ்வாறான மாற்றங்களைச் சந்தித்து வருவதுடன் அதன் தூய்மைத் தன்மைகளையும் இழந்து வருகின்றது எனலாம். கத்தோலிக்க மறைபரப்பும் வகையில் தற்காலத்தில் கூத்துக்கள் அரிதாகவே நிகழ்த்தப்படுகின்றன. தற்கால இளையோரின் இரசனை மாற்றமும் கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்களின் வளர்ச்சியில் தடங்கலாக உள்ளது எனலாம். இந்த இரசனை மாற்றமானது ஈழத்தின் அனைத்து விதமான கூத்துக்களின் கலவை கொண்ட புதியதோர் கூத்து முறை ஒன்றினை உருவாக்கியுள்ளது. பண்டைத் தமிழர்களால் பேணப்பட்ட தனித்துவமான கூத்து மரபுகளில் ஏற்பட்ட மாற்றமானது கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்களை அனைத்து நிலையிலும் சீர்குலைத்துள்ளது எனலாம். அத்துடன் இவ்வாறான முறைகேடுகள் பாடசாலை மாணவர் மனங்களிலும் விதைக்கப்பட்டு வருகின்றது. இறைபணியாற்றி வந்த நாட்டுக் கூத்துக் கலையானது தற்காலத்தில் திரைப்படக் கலைக்கு நிகரான மாற்றத்தைக் கண்டுள்ளது. அதன் கலைச் செழுமையை இழந்து நிற்கும் கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்கள் தூ ய்மைப்படுத்தப்படவேண்டும், அதன் இலக்கியச் செழுமையானது அனைவராலும் பின்பற்றப்படவேண்டும், எனும் கருத்துக்களை முதுபெரும் அண்ணாவிமார்கள் தற்காலத்தில் முன்னிறுத்தி வருகின்றனர். நாட்டுக் கூத்துக் கலையில் தற்காலத்தில் ஈடுபட்டு வரும் இளையோர் வரன்முறைகளையோ மரபுகளையோ பின்பற்றும் பக்குவம் அற்றவர்களாகச் செயற்பட்டு வருவதால் தற்காலத்தின் நாட்டுக் கூத்துக்களை கத்தோலிக்க சமயத்தின் ஆன்மீகக் கருத்துக்களை வெளிப்படுத்தத் தவறியுள்ளன. எனவே கத்தோலிக்க மக்களுக்குப் பயன்படும் வகையில் எதிர்காலத்தில் நாட்டுக்கூத்துக்கள் நிகழ்த்தப்படவேண்டும்.