Abstract:
காதல் என்பது உயிரினங்கள் அனைத்துக்கும் உரிய அடிப்படை உணர்வாகும்.தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக சங்ககால அகத்திணை இலக்கியங்களில் காதல் பற்றிய செய்திகள் அதன் உச்சநிலையில் அழகாக பேசப்பட்டுள்ளன.திருவிலியத்தில் உள்ள "இனிமை மிகு பாடல்கள்" என்ற நூலிலும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடைப்பட்ட அன்புறவு விரிவாக பாடப்பட்டுள்ளன. இறையியலாளர்களின் கருத்துப்படி அவை இறைவனுக்கு ஆன்மாவுக்கு இடையிலான அன்பை வெளிப்படுத்துவையாக கூறப்படுகின்ற போதிலும் அவற்றில் காதற் சுவை மிகுந்து இருப்பதை காணலாம். சங்க இலக்கியங்கள் தலைவன் - தலைவி ஆகியோருக்கு இடையிலே மிளிரும் காதலைப் பேசுகின்றன. பாத்திரங்கள் பாத்திரங்களின் கூற்றுக்கள் இயற்கை சார்ந்து வெளிப்படுத்தப்படும் காதல் உணர்வுகள் பயன்பட்டுள்ள அணிகள் என்ற வகையிலே இனிமைமிகு பாடலும் சங்க அகத்தினை மரபோடு ஒத்து செல்வதனைக் காணலாம். அந்த வகையை திருவிலியத்தில் காணப்படும் இனிமை மிகு பாடலை சங்க அகத்தினை மரபு சார்ந்த ஆராய்வதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். இனிமே மிகு பாடலில் பொதிந்துள்ள சங்க அகத்திணை மரபுக் கூறுகளை சான்று காட்டி நிறுவ முற்படுவதாக இந்த ஆய்வு அமைகின்றது. இந்த ஆய்வானது இனிமை மிகு பாடலையும் சங்க அகத்திணை செய்யுட்களையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் நிலை தரவுகளாக இந்த ஆய்வு தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள் ஆய்வு, கட்டுரைகள் போன்ற எழுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது விபரண ஆய்வு, பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இனிமைமிகு பாடலில் மறைந்து கிடக்கும் அகத்திணை மரபை வெளிக்கொணர்வதற்கு பகுப்பாய்வு முறையியலும் சங்க அகத்திணை கூறுகளை விவரிப்பதற்கு விபரண ஆய்வு முறையியலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான ஆய்வுகள் மூலம் உலக பொதுமையாக உள்ள இலக்கிய மரபை இனங்கான முடிவதுடன் சங்க அகத்திணை மரபு இனிமைமிகு பாடலுக்கு பொருந்தி வரும் தன்மை வெளிக்கொணரப்படும்.அத்துடன் இறைவன் மனிதன் மட்டில் காட்டும் நிபந்தனைற்ற அன்பு வெளிக்கொணரபடுவதோடு காதல் பற்றிய இறையியல் செய்தியும் புலனாகும். இத்தகைய ஆய்வுகள் திருவிலியத்தை வெவ்வேறு இலக்கிய மரபுகளுடன் ஒப்பிட்டு ஆராயும் தன்மையை வளர்ப்பதுடன் இனிமைமிகு பாடல் தொடர்பான சிந்தனைகளை அறிந்து கொள்வதற்கும் ஆராய்வதற்கு ஒரு திசைகாட்டியாய் அமையும் எனலாம்.