Abstract:
கிறிஸ்துவின் அன்பின் சமூகமாகத் திகழும் திரு அவை கிறிஸ்துவின்
அன்பினால் உருவானது. இவ் அன்பின் சமூகம் தொடக்கத்தில் பகிரும் சமூகமாத்
திகழ்ந்தது. இச் சமூகத்தின் வாழ்க்கை முறையை முன்னுதாரணமாகக் கொண்டே
இன்று வரை திரு அவை பயணிக்கின்றது. இதனடிப்படையில் பங்கேற்கும் திரு
அவையாக, ஒன்றுபட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து
சுன்னாக பங்கின் அன்பியத்தின் வகிபாகமும் அவற்றால் விளையும் நன்மைகளும்
அவை எதிர்கொள்ளும் சவால்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடக்கக்
கிறிஸ்தவ சமூகத்தின் பண்புகளை அன்பியங்களில் துலங்கச் செய்வதே இவ்
ஆய்வின் முதன்மை நோக்கமாகும். இதன் அடிப்படையில் இறைவார்த்தையின்
ஒளியில் பங்கேற்பதையும் ஒன்றித்து வாழ்வதையும் கருதுகோளாகக் கொண்டு
சுன்னாகம் புனித அந்தோனியர் ஆலயத்தின் கடந்த இருபது ஆண்டுக் கால அன்பிய
வாழ்க்கை முறையை, கால வரையறையாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்
பட்டுள்ளது. ஆய்வில் கள ஆய்வு முறை, தொகுத்துணர்வு முறை என்பவற்றை
மையமாகக் கொண்டு வினாக்கொத்து, நேர்காணல் மூலம் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் விஞ்ஞான நவீன யுகத்தின் மத்தியில் வாழும் திரு அவையில்
இன்று அன்பியம் மிக வேகமாக வளர்ந்து பல நன்மைகளை ஏற்படுத்தி இருப்பினும்
சில பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளமையைக் காண முடிகிறது. சுன்னாக பங்கில்
அன்பியம் என்ற கருத்தில் அனைவரும் ஒன்றாகக் கூடி ஆலய விடயங்களை
மேற்கொள்கின்றனர், பிறருக்கு உதவிகளைச் செய்கின்றனர். இருப்பினும் அனைவர்
மத்தியிலும் இவ் எண்ணம் காணப்படுவதில்லை. இப்பண்பு சற்று நலிவுற்ற நிலை
காணப்படுகின்றது. அதாவது திருஅவை வாழ்விலும், சமூக வாழ்விலும் அதிகரித்து
வரும் சமூகப் பிறழ்வுகள், குடும்பத்திலும் இளையோர் மத்தியிலும், பாடசாலை
மாணவர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் நடத்தைப் பிறழ்வுகள், தொலைத்தொடர்பு
சாதனங்களின் அளவுக்கதிகமான பயன்பாடு, பகிர்தல் அற்ற சம உடைமைத்தன்மை
மறுக்கப்பட்ட நிலை, கல்வியே உலகம் என்ற பெற்றோரின் மனநிலை, விசுவாசம்
அற்ற குடும்ப வாழ்வு, பொருளாதார ஊழல்கள் போன்ற பண்புகள் பலவற்றினால்
சுன்னாகப் பங்கின் அன்பிய வாழ்வு நசுக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் இருந்து
பங்கினை பிறரன்பு பணி செய்யும் அன்பியக்குழுமமாக மாற்ற குடும்பங்களிடையே
ஒற்றுமையை ஏற்படுத்துதல், ஆன்மீகப் போதனைகளை வழங்கல், ஞாயிறு
திருப்பலியில் குழுமமாகச் சென்று பங்கு கொண்டு வாழும் உயிர்த்துடிப்புள்ள
பங்காக மாற்றித் தொடக்கக் கிறிஸ்தவ அன்புச் சமூகத்தின் பண்புகளான நட்புடன்
உறவாடுதல், அப்பம் பிட்தல், செபித்தல் போன்ற பண்புகளை இவ் ஆய்வின் மூலம்
பங்கில் மேம்படுத்த முடியும் என ஆய்வானது பரிந்துரைகிறது.