Abstract:
நாடகங்கள் சமயச் சடங்குகளிலிருந்து தோற்றம்பெற்று இன்று பல நிலைகளிலும் வளர்ச்சிக் கண்டுள்ளன.
கிறிஸ்தவ வரலாற்றில் மத்திய காலத்தில் இடம்பெற்ற சடங்குகளில் அதிகளவான நாடகப் பண்புகள்
காணப்பட்டமையால் நவீன நாடகத்தின் தோற்றுவாய்க்கு இவை வித்திட்டுள்ளன. அதன்படி முதலில்
உயிர்ப்பு நாடகங்களும் தொடர்ந்து பாடுகளின் நாடகங்களும் தோற்றம் பெற்றுள்ளன. பிற்பட்ட
காலங்களில் மறைபொருள் நாடகங்கள், புனிதர்களின் வரலாறுடன் தொடர்புடைய நாடகங்கள், ஒழுக்கப்
பண்பு நாடகங்கள் என மேலும் அவை வளர்ச்சிக் கண்டுள்;ளன. இலங்கையில் 1543இல் பிரான்சிஸ்கன்
சபையினரின் உத்தியோகப்பூர்வமான வருகையானது கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கு வாய்ப்பளித்தது.
இதன்போது நாடகத் துறையில் ஆழ்ந்த அனுபவமுடைய இயேசு சபை குருக்களின் வருகையால் பல
நாடகங்கள் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளன. 1960களில் இருந்து தமிழ் மொழிக்குரிய தனித்துவமான
எழுத்தாக்கத்தில் மரியசேவியர் அடிகளார் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு திருப்பாடுகளின்
காட்சிகளை மேடையேற்றியுள்ளார். இவர் மறைபொருள் நாடகங்கள் சிலவற்றைக் கத்தோலிக்க வானொலி
சேவையில் ஒலிபரப்புவதில் ஆர்வமாய் ஈடுபட்டுள்ளார். இதற்கென கையெழுத்துப் பிரதியாக
ஆவணப்படுத்தப்பட்ட நாடகங்கள் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளின் பின்னர் 'மறை பொருள் நாடகங்கள்:
தொகுதி - 01' என்னும் தலைப்பில் 2019 ஆண்டு யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றத்தினால் நூல் வடிவில்
வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இந்நாடக
பிரதிகளின் விவிலிய உள்ளடக்கங்களையும் அவற்றின் இலக்கியச் செழுமையையும்
வெளிக்கொணர்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்;பட்டுள்ளது. மரியசேவியர்
அடிகளின் கலை, இலக்கிய பங்களிப்பு என்பது பன்முக நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய
விடயமாகும். ஆய்வானது அவரின் நாடகத்துறை பங்களிப்புக்களில் ஒரு பகுதியான மறைபொருள்
நாடகங்களில், நூலாக வெளியிடப்பட்ட பத்து பிரதிகளை மட்டுமே மையப்படுத்தியுள்ளது. மரியசேவியர்
அடிகளாரின் மறைபொருள் நாடக பிரதியின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்தல், விவிலிய அறிவில்
ஆசிரியரிடம் காணப்பட்ட ஆளுமையைக் கண்டறியும் இலக்குகள் வழியாக மறைபொருள் நாடகங்களின்
இலக்கிய சிறப்புக்களும் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆய்விற்கான தரவுகளைப் பெறுவதற்கு
மரியசேவியர் அடிகளாரின் மேற்கூறிய நூல் பகுப்பாய்வு செய்யப்பட்டு விடயப்பொருள் திறனாய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதுடன், விவிலியத்த்தில் யூத கலாசாரப் பின்னணியில் எழுந்த வரலாறு, மறைசார்
உண்மைகளைத் தமிழ் பேசும் மக்கள் இலகுவில் விளங்கிப் பயனடையும் வகையில் ஆசிரியர் எவ்வாறான
இலக்கிய உத்திகளைக் கையாண்டுள்ளார் என்பதை வெளிக்கொணர்வதற்கு வரலாற்று ஆதார முறையுடன்
உய்த்துணர் முறையியலும் கையாளப்பட்டுள்ளன. யூதப் பின்னணியில் தோன்றிய மிகப்பெரிய வரலாற்றுச்
சம்பவத்தை, சாதாரண சமூகமும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய எளிய நடையில், இரசனையோடு
எடுத்துரைத்துள்ள முறை அவரின் இலக்கிய நடையின் சிறப்புக்கு மேலும் ஆதாரமாயுள்ளது. மரியசேவியர் அடிகளின் மறைபொருள் நாடக பிரதிகளை ஆழமாக உற்றுநோக்கிய ஆய்வு என்னும் வகையில் இந்த
ஆய்வானது தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியப் பரப்பிற்கும் கிறிஸ்தவ இறையியலுக்கும் வலுவாயமையும்.