Abstract:
விஞ்ஞான தொழில்நுட்பமானது உலகில் மிக வேகமாக வளர்ந்து உச்சக்
கட்டத்தை அடைந்துள்ளது. ஆயினும் சமயம் சார்ந்த நோக்கில் ஆன்மீக வாழ்வில்
மக்களின் ஈடுபாடு குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது. இறை விசுவாசத்தை
வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமான தேவையாயுள்ளது. இப்பின்னணியில்
கத்தோலிக்க மாணவர்களின் ஆன்மீக வாழ்வைக் கட்டியெழுப்புவதில் பங்குகளில்
மறைக்கல்வியைப் புகட்டும் மறையாசிரியர்களின் வகிபாகமானது குறிப்பிடத்தக்கது.
திரு அவையானது மறையாசிரியர்களின் பணி மகத்தானது என்னும் உயரிய நோக்கில் மறையாசிரியர்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு செயற்பாடுகளை
முறையாக மேற்கொண்டு வருகின்றது. பொதுக் குருத்துவத்தில் பங்கேற்பதற்கும்
அதனை ஊக்கப்படுத்துவதற்கும் மறைக் கல்வியானது மறையாசிரியர்கள் மூலம்
போதிக்கப்படுகிறது. மறை ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களைக் கத்தோலிக்க
மறைக்கல்வி நடுநிலையமானது பல்வேறு செயற்திட்டங்களினூடாக மேற்கொண்டு
வருகின்றது. அதன் அடிப்படையில் மாதாந்த கூட்டங்கள், செயலமர்வுகள், பயிற்சி
நெறிகள், அவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் எனப் பல திட்டங்களை
முன்னெடுத்தாலும் மறையாசிரியர்களிடையே பணியில் ஆர்வமின்மை
காணப்படுகின்றமையானது ஆய்விற்குரிய பிரதான பிரச்சனையாக அமைந்துள்ளது.
எனவே மட்டக்களப்பு மறைக்கோட்ட மறையாசிரியர்களின் பணி, அவர்கள்
எதிர்நோக்கு பிரதான சவால்கள் என்பவற்றை எடுத்துரைத்து, தீர்வுக்கான
வழிகாட்டல்களை முன்வைப்பதானது ஆய்வின் நோக்கமாகக் காணப்படுகின்றது.
ஆய்விற்கென பிரதானமாக மறைக்கல்வி பற்றிய திரு அவையின் சமூகப் போதனைப்
பயன்படுத்தப்படுவதுடன், மறையாசிரியர்களிடம் நேர்காணல், வினாக்கொத்து மூலம்
பெறப்பட்ட தரவுகளும் பயன்படுத்தப்பட்டு, பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வுக்கு
உட்படுத்தப்பட்டு, முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு
மறைக்கோட்டத்தில் நானூற்று நாற்பது மறையாசிரிகள் பணியாற்றுகின்றனர்.
ஆய்வானது புளியந்தீவு பங்கிலுள்ள மறையாசிரியர்களை மட்டுமே மையப்படுத்தி
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிறு மறைக்கல்வி, அருளடையாளங்களைப்
பெறுபவர்களுக்கான மறைக் கல்வி போன்ற சிறப்புப் பணிகளில் ஈடுபடும்
மறையாசிரியர்கள் ஒவ்வொரு பங்கிலும் முதன்மைப்படுத்தப்பட்டு, பணிகளில்
ஊக்குவிக்கப்படல் வேண்டும். பணியின்போது சவால்களை எதிர்நோக்கும்
மறையாசிரியர்களின் தேவைகள் அடையாளம் காணப்பட்டு, அவை பூர்த்தி
செய்யப்படுதல் வேண்டும். விசுவாசம் குன்றிய குடும்பச் சூழல், தொலைத்தொடர்பு
சாதனங்களின் தாக்கம், விவிலிய அறிவு குன்றிய மறையாசிரியர்கள், மறைக்கல்வியில்
ஆர்வம் காட்டாத அருட்பணியாளர்கள் போன்ற பல சவால் மிக்க பின்னணிகளையும்
மறையாசிரியர்கள் எதிர்நோக்குகின்றார்கள். ஆய்வில் மட்டக்களப்பு மறைக்கோட்டத்தில்
பணியாற்றும் மறையாசிரியர்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விடயத்தெளிவை
எடுத்துரைத்து, எதிர்காலத்தில் அவர்களின் பணியின் மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை
முன்வைப்பதன் மூலம், கிறிஸ்தவ விழுமிய வாழ்வைக் கட்டியெழுப்பும்
மறையாசிரியர்களின் பணியை மேலும் ஊக்கப்படுத்துவதனூடாக வலுவூட்டலாம்.