Abstract:
இறை சாயலில் படைக்கப்பட்ட மனிதர் இன்று தம் வாழ்வைப் பல
துர்குணங்களால் சிதைப்பது இறைசாயலை அவமதிப்பதற்குச் சமமானதாகும்.
அத்தகைய துர்க்குணங்களில் ஒன்றாகவும் யுத்தத்தை விடப் பாரிய அழிவை
ஏற்படுத்துவதாகவும் போதைப் பொருள் காணப்படுகின்றது. தற்கால சூழலில்
உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பெரும் சவாலை ஏற்படுத்தும் தீராப்
பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது. மன்னார் தீவுப் பகுதியில் சிறுவர்கள் தொடக்கம்
அனைத்து வயதினரும் போதைப் பொருள் பாவனையால் சிக்கித் தவிக்கின்றனர்.
எனவே அச் சூழமைவை கருத்திலெடுத்து போதைப்பொருள் பாவனையாளர்களின்
பாதிப்புக்களைக் கண்டறிதலே ஆய்வின் நோக்கமாகும். போதைப் பொருள் பாவனை
மூலம் ஏற்படும் பிரச்சனைகளை வெளிக் கொணர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு
நடவடிக்கைகளைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வில் புத்தொளி வீச வைப்பதே
ஆய்வின் கருதுகோளாகும். ஆய்விற்கு நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பவற்றின்
மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உய்த்துணர் முறை
பயன்படுத்தப்பட்டுள்ளது. 2020-2023 ஆண்டுக் காலப் பகுதிக்கு முன்பு மன்னார்த் தீவு
மக்களிடையே போதைப் பொருள் பாவனையின் நிலை, பிற்பட்ட காலத்தில்
அந்நிலையில் ஏற்பட்ட மாற்றம் அதனைக் கட்டுப்படுத்துவதற்காகத் திருப்புமுனை
எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதைக் கண்டறிய நேர்காணல்
மற்றும் அவதானிப்பு முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. போதைப் பொருள் மக்களால்
தீர்க்கப்படாத பிரச்சனையாக உலவி வருகின்ற வேளையில் திருப்புமுனை தனது
நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதிலும் மக்களின் ஒத்துழைப்புக்கள் சரிவரக்
கிடைக்காமையினால் இன்றும் பாவனையாளர்கள் அதிகரித்த வண்ணம்
காணப்படுகின்றனர். போதைப் பொருள் பாவனையால் குடும்பங்களில் வறுமை மற்றும்
உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. போதைப்பொருளின் விலையேற்றங்களை
கவனத்திலெடுக்காத பாவனையாளர்களின் தொகை அதிகரித்து வருவதுடன்
கலாச்சாரம், பண்பாடு, சுதந்திரம் எனப் பல விதங்களிலும் பெண்கள் பாதிப்படைகின்றனர்.
ஆகவே மக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களைத் திருப்புமுனைக்கு வழங்கும் போது
அவர்கள் தமது பணியை செவ்வனே செய்வதற்கு வழிவகுக்கும். ஆன்மீகம் குறையும்
போதும் துர்க்குணங்கள் தலை தூக்கும் கல்வி, ஆன்மீகம், கலைச் செயற்பாடுகளுக்கு
போதிய முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிப்பதன் மூலம் வளர்ந்து வருகின்ற
சமூகமும் போதையில் தத்தளிக்கும் சமூகமும் மீட்சி பெறும் என்பதை ஆய்வானது
பரிந்துரைகளாக முன்வைக்கிறது.