Abstract:
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பிற்பாடு திரு அவையில் பொதுநிலையினரின்
பங்கேற்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எதிர்கொள்கின்ற
சவால்கள் பலவாறாகக் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மறைமாவட்டத்தின்
ஆரையம்பதி புனித குழந்தை திரேசம்மாள் ஆலயத்தை மையப்படுத்திய ஆய்வானது
பொதுநிலையினரது பங்கேற்பு பணிகள்இ அந்த பங்கேற்புப் பணிகளில் அவர்கள்
எதிர்கொள்ளும் சவால்கள் யாரிடமிருந்து வருகின்றன? என்பதை அடையாளம் கண்டு
எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும் என்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆரையம்பதிப் பங்கில் பாலர் சபை, பீடப்பணியாளர் சபை, பாடகர் குழாம்இ
இளைஞர் ஒன்றியம், மறையாசிரியர் ஒன்றியம், மரியாயின் சேனை, வின்சன் டீ
போல் சபை, அன்பியக் குழுக்கள் மற்றும் பங்கு மேய்ப்புப் பணிச்சபை என
பல்வேறுபட்ட பங்கேற்பு அமைப்புக்கள் காணப்படுகின்றன. இந்த அமைப்புக்கள் பங்கில் செயலாற்றுகின்ற விதத்தை ஆய்வு செய்வதற்காக இரண்டு விதமான
முறையியல்கள் கையாளப்படுகின்றன. திரு அவை ஆவணங்களை நன்குக்
கற்றுக்கொண்டு ஒரு தெளிவினைப் பெறுவதற்கும் திரு அவை ஆவணங்களில்
வெளிப்படுத்தப்படுகின்ற பங்கேற்புப்பணி முறை எவ்வாறு பங்கு வாழ்விலே
செயற்படுத்தப்படுகின்றது என்பதை அவதானிப்பதன் ஊடாக பங்கேற்பு
அமைப்புக்களில் பணியாற்றும் பொதுநிலையினரிடம் நேரடியாகச் சென்று பேட்டி
காண்பதனூடாகவும் மற்றும் பங்கின் மூத்த உறுப்பினர்களிடம் உரையாடி,
வினாக்கொத்துக்களை வழங்குவதனூடாகவும் தரவுகளைப் பெறுவதற்காக
அவதானிப்பு, உய்த்தறிவு மற்றும் தொகுத்தறிவு முறையியல்கள் பயன்படுத்தப்
படுகின்றன. பங்கில் பொதுநிலையினரின் பங்கேற்பு முறையை ஆராய்ந்து
பார்ப்போமேயானால், அவர்கள் பங்கில் எவ்வாறு பணியாற்றுகிறார்கள், பெயரளவில்
பங்காற்றுகிறார்களா அல்லது முழு மனதுடன் பங்கேற்கும் திரு அவை தங்களது
பணியின் அழைத்தலின் நோக்கத்தை உணர்ந்து செயற்படுகின்றார்களா என
ஆராயப்பட்டது. அது ஒரு பெரும் கேள்விக்குறியோடு நிற்பதைக் காணக்கூடியதாக
இருந்தது. அதனால் ஆரையம்பதிப் பங்கில் பங்கேற்கும் திரு அவையானது இன்னும்
வேரூன்றவேயில்லை என்றே கூறலாம். எனவே திரு அவை உறுப்பினர் அனைவரும்
செயலாக்கம் பெற்று உயிரோட்டமுள்ள இறைமக்களாய் ஒரே திரு அவையாக
மாறவேண்டும். அவ்வாறு செயற்படும் பட்சத்தில் பங்கேற்பு அமைப்புக்கள் அனைத்தும்
முழுமை பெற்றதாகக் காணப்படும். மறைமாவட்டங்களால் நடாத்தப்படும் தியானங்கள்,
ஒன்று கூடல்கள் மற்றும் பயிற்சிப் பாசறைகள், ஞான ஒடுக்கங்கள், வளர்ந்தோர்
மறைக்கல்வி மற்றும் இறையியல் கல்லூரிகள் என்பவற்றில் பங்கேற்பதன் வழியாக
பொதுநிலையினருக்கே உரித்தான பணி, பெறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றக்
களத்தை உருவாக்க முடியும் என்பதும் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனை
முன்னெடுப்பதற்குத் திரு அவையின் ஆவணங்கள் சிறந்த முறையில் உதவியாய்
அமைவதால் அவற்றின் உள்ளடக்கங்களை அறிவதிலும் வெளிப்படுத்துவதிலும்
சிறந்த பயனை அடையலாம்.