Abstract:
ஆசிய நாடுகளின் கல்வி வளர்ச்சிக்கும் கல்வி வாய்ப்புகளின்
பரவலாக்கத்துக்கும் கிறித்தவம் ஆற்றியுள்ள பங்களிப்புகளை ஆய்வதை ஒரு
நோக்கமாகக் கொண்டுள்ள இந்த அனைத்துலக ஆய்வு மாநாட்டில், ஆசியக்
கண்டத்தின் மிகப்பெரிய நாடாக - ஒரு துணைக்கண்டமெனத்தகு நிலையில்
விளங்கும் இந்தியப் பெருநாட்டில் அண்மை நூற்றாண்டுகளில் கல்வித் துறையில்
கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களும் - வியத்தகு மேம்பாடும்,
ஆய்வுப் பார்வைக்குட்படுத்தப்படுவது, மிகவும் பொருளும் பொருத்தமும்
உடையதொன்றாகும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட (கி.மு.) நூற்றாண்டுகள் தொடங்கி,
நிலவி வந்த பல்வேறு கல்விமுறைகளைப் பலவாகப் பகுத்துப் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் ஆரியர்கள் என்றும் அழைக்கப்பட்ட பிராமணர்கள் தந்த வேதகாலக்
கல்விமுறை கி.மு. 6 வரை நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கல்வி, வேதங்களை
ஓதும் பிராமணர்களுக்கு மட்டுமே தரப்பட்டது. தொடர்ந்து, புத்த, சமணத் தாக்கத்தால்
அவர்கள் வழங்கிய கல்வி முறை ஏற்பட்டது. அதில் பெண் கல்விக்கு இடம்
இல்லை. தொடர்ந்து, கி.மு. 2 முதல் கி.பி. 2 நூற்றாண்டு வரை நிலவியதாகக்
கூறப்படும் சங்க காலக் கல்விமுறை பற்றிச் சங்க இலக்கியங்கள் மட்டுமே
வெளிப்படுத்துகின்றன. பின்னர் ஏற்பட்ட இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில், அரபு
மற்றும் பாரசீக மொழிகளிலேயே கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. மதரசாக்கள் எனப்பட்ட
மதம் சார்ந்த பள்ளிக்கூடங்களே இயங்கின. கி.பி. 15 இல் வந்த போர்த்துகீசியர்
முதலியோரது கல்விப்பணி பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. பின்னர் கி.பி.
17 ஆம் நூற்றாண்டளவில் வந்த ஆங்கிலேயக் கிறித்தவர்களான கிழக்கிந்தியக்
கம்பெனியார் காலத்தில்தான் இந்தியக் கல்விமுறையில் பெரும் மாற்றங்கள்
செயல்படுத்தப்பட்டன. அந்த ஆட்சியாளர்களும், அதே காலத்தில் கிறித்தவ மறை
பரப்பு இயக்கங்கள் வழியாக செயல்பட ஆரம்பித்த கிறித்தவ அருட்தொண்டர்களும்
ஆற்றிய பங்களிப்புகளும் ஏற்படுத்திய மாற்றங்களும்தான் இந்தக் கட்டுரையின்
ஆய்வுப்பொருள். கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் முதலிலும், தொடர்ந்து ஆங்கிலேய
அரசின் கீழும் காலனி நாடாக இருந்த இந்தியாவில் ஆங்கில ஆட்சியாளர்கள்
கல்வி முறையில் எண்ணற்ற மாற்றங்களைப் படிப்படியாகக் கொண்டு வந்தனர்.
அருட்தொண்டர்கள் செய்த கல்வித்துறைப் புரட்சி: அருட்தொண்டர்கள் செய்த
கல்வித்துறைப் புரட்சி: இதே காலத்தில், ஆங்கில அரசின் ஆதரவோடும் ஆதரவின்றியும் கல்லூரிகளையும் பள்ளிகளையும் ஏற்படுத்திய கிறித்தவ அருட்தொண்டர்கள் பலர்.
இந்த அருட்தொண்டர்கள் செய்த கல்விப்புரட்சியின் வாயிலாக, இந்திய சமுதாயத்தில்
ஏற்பட்ட முக்கியமான சில மாற்றங்களாக, காலகாலமாகக் கல்வி மறுக்கப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும், கிராமப்புற மக்களும் கல்வி பெற்றமை,
சமத்துவக் கல்வி தரப்பட்டமை, உள்ளுர் மொழிகள் வளர்ச்சி பெற்றமை, வெறும்
சமய நூல்கள் மட்டுமன்றி பல்வேறு அறிவியல் துறைகள், வரலாறு, இலக்கியங்கள்
முதலியவை கற்பிக்கப்பட்டவை, ஒழுக்கநெறியும் இறைப்பற்றும் ஊட்டப்பட்டவை
முதலியனவற்றைத் தக்க அக, புறச்சான்றுகளோடு இக்கட்டுரை விளக்கும்.