Abstract:
சமூக ஊடகங்கள் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினருக்குத்
தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ள உதவுகின்றன. அவற்றுள் முகநூல், வலையொளி,
புலனம், கீச்சகம், படவரி எனும் ஐந்து சமூக ஊடகங்கள் மட்டுமே ஆய்வுக்குத்
தெரிவு செய்யப்பட்டுள்ளன. சம காலத்தில் சமூக ஊடகங்களின் செல்வாக்கினால்
இளையோர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை
வெளிப்படுத்துவதே ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது. மனிதனுக்கு இறைவன்
கொடுத்த ஞானத்தால் உருவாக்கப்பட்ட இச் சமூக ஊடகங்களை அவற்றின் நன்மை,
தீமைகளை அறிந்து நல்வழியில் பயன்படுத்துவதையே திரு அவை விரும்புகின்றது.
இன்றைய இளையோர் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி அவற்றின்
செல்வாக்கிற்குள் தம்மை அடிமையாக்கி வாழ்கின்றனர் என்பதே இவ் ஆய்வின்
பிரச்சனையாகும். அத்துடன் மட்டக்களப்பு- கல்லடித் திருச்செந்தூர்க் கிராம
இளையோரை மையப்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்துவதில் கத்தோலிக்க
ஆலயங்களின் பங்களிப்பு மற்றும் இறையாட்சிப் பணியை நிலை நாட்டுவதில் இன்று
இளையோர் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்த திரு அவை முன்னிறுத்திச்
செயற்படுதல் போன்ற இரு கருதுகோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. சமூக
ஊடகங்களின் மூலம் எதிர்கொள்கின்ற சவால்களான இளையோர் உடல், உள
ரீதியான தாக்கங்கள், தவறான ஊடகப் பாவனையால் உருவாகியுள்ளன. சமூக
சீர்கேடுகள், ஒழுக்கவியல் சார் பிரச்சனைகள், நவீன கலாச்சார மோகங்களால்
இளையோர் தனிமனித, சமூக, குடும்ப வாழ்வும் அழியும் நிலை உருவாகுதல்
என்பவை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பரிந்துரைகளை
முன்வைப்பதற்கு ஆய்வு முறையியல்களான விபரண முறை, உய்த்துணர் முறை
மற்றும் தொகுத்தறிவு முறை என்பன கையாளப்பட்டுள்ளன. முதன்மைத் தரவுகளைச்
சேகரிக்க நேர்காணல், அவதானம், குழுக் கலந்துரையாடல் மற்றும் வினாக்கொத்து
முறைகள் மூலம் ஐம்பது நபர்களிடம் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சமூக ஊடகங்களுக்கு இளையோர் அடிமையாகி வாழ்வதால் கடவுள்
கொடுத்த வாழ்வு சீர்குலையும் நிலை உருவாகியுள்ளது. சமூகத்தில் முக்கிய
வகிபாகமுள்ளவர்களாக இருக்கும் இளையோரை சமூக ஊடகங்களினால் அவர்கள்
எதிர்நோக்கும் சவால்களில் இருந்து மீண்டெழச் செய்வதோடு அவற்றிலுள்ள
தீமைகளை அறியச்செய்து நல்லொழுக்க விழுமியமுள்ள பிரஜைகளாக சமூகத்தில்
உருவாக்குவது திரு அவையிலுள்ள அனைவருடைய பொறுப்பாகும் என இரண்டாம்
வத்திக்கான் சங்க ஏடு வலியுறுத்துகின்றது. ஆகவே கடவுளின் சாயலாகப படைக்கப்பட்ட மனிதன் அவர் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்தி சமூக
ஊடகங்களிலுள்ள நன்மை, தீமைகளைப் பகுத்தாராய்ந்து அவற்றிலுள்ள தீமையைத்
தவிர்த்து நல்வழியில் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வைத் திரு அவை
இளையோருக்கு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து சமூக
ஊடகங்களை நன்மைத்தனத்துடன் பயன்படுத்தும் விடயங்களை இவ் ஆய்வானது
பரிந்துரைக்கிறது.