| dc.description.abstract |
ஏழைகள் மட்டில் கரிசனையுடன் நடத்தல் தொடர்பாகப் பல எடுத்துரைப்புக்களை
விவிலியத்தில் காணலாம். இறைவாக்கினார்கள் கடவுளை ‘அனாவிம் யாவேயாக’
அதாவது ஏழைகள், துயருறுவோர், புறந்தள்ளப்பட்டோரின் மீட்பராக
அடையாளப்படுத்தியுள்ளனர். விவிலியத்தின் எடுத்துரைப்புக்களும் இயேசுவின்
போதனைகளும் இன்று கத்தோலிக்கத் திரு அவையானது ஏழைகள் சார்பான
பணியில் ஈடுபாட்டுடன் செயற்பட வழிவகுத்துள்ளன. ஆய்வானது கத்தோலிக்கத்
திரு அவையிலுள்ள வின்சன் டீ போல் சபையின் பணிகளை மையப்படுத்தி
அமையப்பெற்றுள்ளது. இச் சபையானது யாழ் மறைமாவட்டத்தில் ‘பந்தி’ என்னும்
பெயரில் ஒவ்வொரு பங்குகளிலும் அழைக்கப்படுவதுடன், அதனூடாக ஏழை மக்களின்
தேவைகளைப் பூர்த்திச் செய்யும் பல செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. ஆய்வானது நாவாந்துறை பரலோக அன்னை ஆலயப் பங்கைக்
களமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவாந்துறை பரலோக அன்னை
ஆலயப் பங்கிலுள்ள ஏழைகளுக்குக் கடவுளின் பராமரிப்பை உணர்த்தி, இறை
நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான
வழிமுறைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளைக் கிறிஸ்தவ நோக்கில்
முன்வைப்பதே ஆய்வின் நோக்கமாகும். ஆய்வானது தொகுத்தறி, ஒப்பீடு, கள
ஆய்வு என்னும் முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவாந்துறை
பரலோக அன்னை ஆலயப் பங்கிலுள்ள மக்களுக்கு பல்வேறு பக்தி சபைகளின்
உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலும் இவர்களது வாழ்க்கைத் தரம்
முன்னேற்றம் எதுவுமின்றி காணப்படுவதானது ஆய்வுப் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது. பரலோக அன்னை ஆலயப் பங்கிலுள்ள வின்சன் டீ போல்
சபையானது வறுமையில் வாழும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி
செய்கின்ற ஓர் பக்தி சபையாகச் செயல்படுகின்றதா? அல்லது மக்களின் நிரந்தரமான
வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருளாதார உதவிகளை
முன்னெடுக்கின்றதா? என்னும் வினாக்கள் ஆய்வினை முன்னெடுக்க வழிவகுத்துள்ளன.
நாவாந்துறை பரலோக அன்னை ஆலயப் பங்கிலுள்ள நானூறு குடும்பங்களில்
ஐம்பது குடும்பங்களே மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர் என்பது
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பங்கிலுள்ள வின்சன் டீ போல் பக்தி
சபையினால் பிடி அரிசித் திட்டம், கல்விக்கான உதவி திட்டம் போன்ற சிறிய
பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்களின் தொடர் வறுமை நிலையை நீக்கும்
செயற்திட்டங்களை முன்னெடுக்கும் வகையான செயற்பாடுகள் இதுவரையும்
மேற்கொள்ளப்படவில்லை என்பதுத் தெளிவு. மக்களின் தொடர் வறுமை நிலையை
நீங்கி, தமது நிரந்தர பொருளாதாரத்தைத் தாமே கட்டியெழுப்ப முயற்சிக்க வின்சன்
டீ போல் பக்தி சபையானது உரியச் செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நிரந்தர வருமானத்தைப் பெறும்
திட்டத்தை உருவாக்கும் வழிகளை மேற்கொள்வதோடு, உதவிகளை எதிர்பார்க்கும்
சமூகத்தையல்ல சுயதொழில் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தும் சமூகத்தை
உருவாக்கும் திட்டங்களுக்கு வழிவகுக்க வேண்டும். விவசாயம், கோழி வளர்ப்பு
போன்ற வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களை மேற்கொள்ள உதவித்திட்டங்களை
செய்தல் போன்றவற்றை ஆய்வானது பரிந்துரைக்கிறது. |
en_US |