Abstract:
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனும்
தலைப்பின் கீழ் ஓர் இறையியல் பார்வையாக இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் மனிதனின் இருப்பை நிர்ணயிக்கும்
அடிக்கட்டுமானமாகிய பொருளாதாரம் சிறப்பாக அமையாவிட்டால் மேற்கட்டுமானத்தில்
அமையும் மனிதனின் தேவைகள் நிறைவு செய்ய முடியாத போது வாழ்வில்
பிரச்சினைகள் தோன்றும். இன்று பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரித்துச செல்கின்றன. குறிப்பாக குருநகர் பிரதேசத்திலும் புனித யாகப்பர் ஆலய பங்கைச்
சேர்ந்த பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தங்கள்
வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டே தங்கள் வாழ்வை முன்னெடுத்துச்
செல்கின்றனர். ஆசியச் சூழமைவிலும் இந்நிலை காணப்படுகின்றது. இயேசுவின்
இறையாட்சிப் பார்வையில் பெண்களும் முக்கியம் பெறுகின்றனர். இயேசு பெண்கள்
மட்டில் பரிவிரக்கம் காட்டுவதனை நற்செய்திகளில் காணமுடியும். எனவே பெண்கள்
மட்டில் இன்றைய சமூகம் எத்தகைய மனப்பாங்கு கொண்டவர்களாக விளங்க
வேண்டும், பெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள், அவர்களின் முன்னேற்றத்தில்
பலரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். இவ்வாய்வின் பிரதான நோக்கம் பெண்
தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதுடன்
இதற்கான தீர்வுகளை முன்வைப்பதுமாகும். இவ்வாய்வின் பிரதான கருதுகோள்
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல பிரச்சினைகள் எதிர்கொள்கின்றனர்
என்பதாகும். பெண்தலைமைத்துவ குடும்பங்கள் ஏன் அதிகரித்துச் செல்கின்றன?
இவர்கள் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்? இறையியல் ரீதியில்
எத்தகைய தீர்வுகளை முன்வைக்க முடியும்? போன்றன ஆய்வுப் பிரச்சினைகளாக
முன்வைக்கப்படுகின்றன. இப்பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைக் கண்டறிவதன்
மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தங்கள் குடும்பங்களைச் சரியான
பாதையில் கொண்டு செல்வதற்குப் பல உதவிக்கரங்கள் உதவும் என்னும் நோக்கோடு
இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாய்வுக்கு ஒரு பண்பு சார் ஆய்வுமுறை
பொருத்தமாக அமையும். இவ்வாய்வில் வினாக்கொத்து, அவதானிப்பு, ஆவணச்
சான்றுகள் என்பன தரவு சேகரிப்பு கருவிகளாகப் பயன்படுத்தப்படவுள்ளன. குருநகர்
புனித யாகப்பர் ஆலயப் பங்கைச் சேர்ந்த முப்பது பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
தெரிவு செய்யப்பட்டு ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவே ஆய்வு எல்லையாகும்.
தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பது உறுதிப்படுத்தப்படும். அதற்கான
சரியான தீர்வுகளையும் முன்வைப்பது ஆய்வின் பயன்பாடாக அமையும். மேலும்
ஆய்வின் முடிவுகளாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான சுயதொழில்
வாழ்வாதார விடயங்களைத் திரு அவை முன்னின்று செயற்படுத்தல், பிள்ளைகளின்
கல்வித்தரத்தை உயர்த்தும் அனுசரணைத் திட்டங்களை முன்வைத்தல், ஆன்மீக
வலுவூட்டும் செயற்றிட்டங்களைப் புகுத்தி இறைவனே குடும்பத்தின் தலைவர்
என்பதைப் புரிய வைத்து ஆன்மீக மகிழ்ச்சி பொங்கும் இல்லங்களை உருவாக்குதல்
போன்றவற்றை ஆய்வானது பரிந்துரைக்கிறது.