Abstract:
உலக நாகரிகங்களின் வரலாற்றின் கிறிஸ்தவ நாகரிகமானது மனிதனுடன்
தன்னை ஒன்றாக்கிப் பயணிக்கின்றது. திரு அவையானது இறை மக்களைத் தனது
கட்டமைப்பிற்குள் பேணி பாதுகாப்பதும் மனிதனின் இருப்பியல் சூழமைவின்
மாற்றங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றது. அந்த வகையில் ஒவ்வொரு
மனிதனின் பிறப்பில் இருந்து அவனது வாழ்வின் ஒவ்வொரு மாற்றத்திலும் அவனை
நெறிப்படுத்தி வழிப்படுத்துகின்றது. திரு அவைப் பாரம்பரியங்கள், போதனைகள்
இவற்றின் மூலங்களாக விளங்குகின்றன. அந்த வகையில் நெருங்கிய உறவினரோடு
திருமணம் செய்வதைத் திரு அவை தடை செய்கின்றது. ஆயினும் சுன்னாகம் தூய
அந்தோனியர் ஆலய பங்கில் நெருங்கிய உறவினரோடு திருமணம் செய்யும் முறை
அதிகரித்துக் காணப்படுகின்றது. இவை தற்கால சமூகத்திற்கு மட்டுமல்லாது
எதிர்கால சந்ததியினருக்கும் பெரும் சவாலாகக் காணப்படலாம். எனவே இப்
பிரச்சினையை இயன்றளவு நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை
உருவாக்குவதே இவ் ஆய்வின் பிரதான நோக்கமாகும். நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்வதால் பலர் உடல், உள நோய்களுக்கு உட்பட்டுக் காணப்படுகின்றனர்
என்பது கருதுகோளாகக் காணப்படுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் சுன்னாகம்
பங்கில் இடம்பெற்ற நெருங்கிய உறவு முறைத் திருணமணங்களை மட்டுமே ஆய்வு
மையப்படுத்தியுள்ளது. கள ஆய்வு, தொகுத்துணர்வு ஆய்வு ஆகிய ஆய்வு
முறைகளினூடாக வினாக்கொத்து, நேர்காணல் மூலம் ஆய்வானது
மேற்கொள்ளப்படுகின்றது. இரத்த உறவு என்பது பிறப்பினால் உருவாகும் உறவு
முறை இதில் மனிதர்கள் விருப்பத்திற்கு இடமே இல்லை. இதில் திரு அவை
கவனமாக இருக்கின்றது. ஏனெனில் மருத்துவக் காரணங்களின்படி பிறக்கின்ற
குழந்தைகள், உடல், உள நோய்களுக்கு உட்பட்டுப் பிறக்கும் வாய்ப்பு அதிகமாகக்
காணப்படுகின்றது. அவ்வாறே சுன்னாகப் பங்கில் பல்வேறு விதமான குறைபாடுகள்
காணப்படுகின்றன. கேட்டல், பார்வை, பேச்சு குறைபாடுகள், இரத்த நோய்கள்,
தொற்றா நோய்கள், மன உளைச்சல், கட்டாயத்திருமணம், தாங்கிச் செல்லும்
குடும்ப வாழ்வு என்பன பெரும் சவாலாகக் காணப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க
வேண்டியது காலத்தின் கட்டாயமான தேவையாக உள்ளது. எனவே இதற்கு
அடிப்படைக் காரணமாகிய சாதிப் பாகுபாடு, ஏனைய சமூகத்தின் மட்டில் நற்புரிதல்
இன்மை, சொத்துரிமை, மூட நம்பிக்கை, எமது சமூகம் எம்மை ஏற்றுக் கொள்ளாது
என்ற எண்ணம், உறவுத் திருமண வாழ்வின் ஒன்றிப்பு, மணமுறிவு இன்மை, சமூக
பழக்க வழக்கங்கள் என்பன நெருங்கிய உறவு திருமண முறைக்கு அடிப்படைக்
காரணிகளாகும். ஆய்வானது மக்கள் மட்டில் காணப்படும் பாரம்பரிய நடைமுறைகளைக்
களைந்து ஆரோக்கியமான சமூகத்தை விழிப்புணர்வுடன் உருவாக்கும் பரிந்துரைகளை
முன்வைக்கிறது.