| dc.description.abstract |
உலக நாடுகளில் ஆசிய நாடுகள் விவசாயத்தினை தமது பிரதான
ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளன. இருப்பினும் காலாகாலமாக தமிழர்களின்
பழைமையானதும், பாரம்பரியமானதுமான இத்தொழிலைத் தொடர்ச்சியாக
முன்னெடுப்பதில் இன்று பற்பல பிரச்சினைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன்படி,
மத்தேயு நற்செய்தியில் முன்வைக்கப்பட்டுள்ள இயேசுவின் விண்ணரசுப் பற்றிய
போதனைகள் விவசாயத்தினைப் பின்புலமாகக் கொண்டு பேசுகின்றது. ஆய்வின் வழி
சமகால விவசாய போக்குகள், இயற்கை விவசாயம் பற்றியக் கண்ணோக்கு,
விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற யதார்த்தங்கள் வெளிக்கொணரப்படும்.
திருவிவிலிய எழுத்தாளர்கள் எமக்கு அன்றாட வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு
இறைவார்த்தையை எடுத்துரைத்துள்ளனர். கிறிஸ்துவும் விண்ணரசுப் பற்றிப் பேசுகின்ற
போது விவசாயம் பற்றிய உவமைகள் வாயிலாகவும் அதன் தன்மையையும், அது
நிறைவுறும் விதத்தையும் விளக்கியுள்ளார். விண்ணரசுப் போதனையில் இயேசு
பயன்படுத்துகின்ற விவசாயம் பற்றிய உவமைகளிலிருந்து இயேசுவின் விவசாயம்
பற்றிய மனநிலையையும், அதன் முக்கியத்துவத்தினையும் காணலாம். இங்கு
விவசாயத்தினை இயேசு, ஒரு புனிதமான செயலாகவும் இறையாட்சியை மலரச்
செய்கின்ற விடயமாகவும் உருவகித்துள்ளார். பலஸ்தீன வாழ் மக்களின் வாழ்க்கைச்
சூழலுக்கும், தற்காலத்து வாழ்க்கைச் சூழலுக்கும் சில ஒன்றுபட்ட ஒருமைப்பாட்டைக்
காணக்கூடியதாய் இருப்பினும் விவசாயத்தைப் பற்றிய இயற்கையோடு ஒட்டிய வாழ்வு, தொழில் மற்றும் அமைப்புகளில் பல மாற்றங்களையும், முரண்பாடுகளையும்
அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விவசாய மேம்பாட்டிற்கு விண்ணரசுப் போதனை
பங்களிப்புச் செய்ய முடியும் என்பதைக் கருதுகோளாகக் கொண்டு ஆய்வு
மேற்கொள்ளப்படவுள்ளது. மத்தேயு நற்செய்தியில் உள்ள விவசாயத்தை
மையப்படுத்திய விடயங்களைச் சங்குவேலி கிராம விவசாய பின்னணியோடு ஒப்பிட்டு
நோக்கி, இப்பின்னணியில் சங்குவேலி கிராம விவசாயமானது சமகாலச் சூழலில்
இறையாட்சிப் போதனைக்கு ஏற்றதா அல்லது முரணாகவுள்ளதா என்பதை ஆய்ந்து,
இங்குள்ள சவால்களை எடுத்துக்காட்டி விவசாயத்தின் மேம்பாட்டுக்கு ஏதுவான
பரிந்துரைகளை முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்காகும். ஆய்வில் அவதானிப்பு
முறை கையாளப்பட்டு, பெறப்பட்ட விடயங்கள் உய்த்துணர் முறை, தொகுத்தறி
முறை மூலம் முன்வைக்கப்படவுள்ளன. சங்குவேலி கிராமத்தினை மையமாகக்
கொண்ட மத்தேயு நற்செய்தி நோக்கிலான விண்ணரசு போதனையும் விவசாய
மேம்பாடும் என்னும் ஆய்வானது எதிர்காலத்தில் விவசாயம் சார்ந்து ஆய்வுகளை
மேற்கொள்பவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் முன்மாதிரியான வழிகாட்டியாக
அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
en_US |