Abstract:
கூத்து நாடகங்களாக 1980களிற்கு முன்னர் அரங்கேற்றப்பட்ட கலை
வடிவங்கள் பிற்பட்ட காலங்களில் சினிமாவாக பெருவளர்ச்சி கண்டுள்ளன.
சினிமாவைப் பொறுத்த வரை சொல்ல வந்த விடயத்தைக் குறிப்பாக இரு
மணித்தியாலங்களுக்குள் சொல்லி முடித்து விடுவார்கள். இவை சமுதாயத்தில்
சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைப்பதாகவும், சமுதாயத்தைச் சீர்தூக்கி
வைப்பவையாகவும் மிளிர்ந்தன. சினிமா அன்னையர் மட்டத்தில் பெருந்தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை. ஆயினும் சினிமா காலப்போக்கில் 1990களின் பின்னர்
சின்னத்திரையாக மாற்றம் பெற்றுத் தொடர் நாடகங்களாக மிளிர்ந்தன. கருப்பொருள்
ஓரிரு மணித்தியாலங்களிலோ குறிப்பிட்ட காலத்திலோ நிறைவுறாது. தினமும் அரை
மணித்தியாலங்களாக ஐந்து வருடங்களையும் கடந்தன. இதனால் அன்னையர்களின்
மனதில் பெரிதும் இடம்பிடிக்கத் தொடங்கி ஓய்வு நேரப்பொழுது போக்காக இருந்த
கலைத்துறை அன்னையர்களுக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. எனவே
அன்னையர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கணவன் மனைவி உறவிலும் தாய்
பிள்ளைகளின் பாசப்பிணைப்பிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி, கிறிஸ்தவ
விழுமியப் பண்புகள் கேள்விக் குறியாக மாறியுள்ளது. கிராமப் புறங்களில் வாழும்
அன்னையர்கள் தங்களுடைய வேலைகளைக் கவனிப்பதிலும், கூலி வேலைகளுக்குச்
செல்வதிலும் கவனத்தைச் செலுத்துவதால் அவர்கள் மத்தியில் தொடர் நாடகங்களின்
செல்வாக்குக் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் நகர்ப்புற மேற்தட்டு
அன்னையர்களிடையே இதன் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்றது. சமூகத்தில்
முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அரச பதவிகள் வகிக்கும் கிறிஸ்தவ
அன்னையர்களே தொடர் நாடகங்களுக்கு அடிமையாகிக் காணப்படுவது
ஆச்சரியமானதே. யாழ்ப்பாண நகர்ப்புறங்களில் உள்ள ஐம்பது மேற்தட்டு கிறிஸ்தவ
அன்னையர்களை எழுமாறாகத் தெரிவு செய்து அவர்களுடைய இல்லங்களுக்குச்
சென்று இலகுவாகப் பதிலளிக்கக்கூடிய வினாக்கொத்தை வழங்கி நேர்காணல்
மூலமாகத் தகவல் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு வழியாகத் தீர்வுகள் தொகுப்பாய்விற்
உட்படுத்தப்படுகின்றன. தொடர்நாடக மோகத்தின் அடிமைத்தனத்திலிருந்து
அன்னையர்களுக்கு விழிப்புணர்வு மூலம் விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதே இவ்
ஆய்வின் நோக்கமாகக் காணப்படுகின்றது. தென்னிந்தியத் தொலைக்காட்சி தொடர்
நாடகங்களில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வது, ஒருவரின்
கணவனை அடைய இன்னொருவர் முயற்சி செய்வது, குடும்பத்தைப் பிரிக்க,
கெடுக்கப் பலர் முனைவது, அழகிய பெண்ணொருவர் வில்லிப் பாத்திரம் ஏற்றுக்
கூலி ஆட்களுக்குப் பணத்தைக் கொடுத்து ஆட்களைக் கடத்துதல், கொலை
செய்தல், பழிவாங்கல் முயற்சி செய்தல் எனப் பல தீமையான விடயங்களே
நாடகத்தின் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றன. கதாநாயகன், கதாநாயகியிடம் நல்ல பண்புகள் இருந்தாலும் மேற்கூறிய காட்சிகள் மூலம் தீய பண்புகளே
மேலோங்கிக் காணப்படுகின்றன. பெரும்பாலும் எல்லா தொடர் நாடகங்களிலுமே
இத்தகைய காட்சிப்படுத்தல்கள் காணப்படுகின்றன. அத்தகைய தொடர் நாடகங்களை
மீண்டும், மீண்டும் பார்க்கும் ஒருவரின் மனதில் அப்பண்புகள், பழக்கவழக்கங்கள்
விதைக்கப்படுகின்றன. இதனால் கிறிஸ்தவ விழுமியப் பண்புகள், பழக்கவழக்கங்கள்
மறைந்து போகின்றன. எனவே குடும்பத்தின் ஆணி வேரான அன்னையர்களை
மீட்டெடுக்க அவர்களைப் பக்தி சபைகளில் இணைத்தல், விழிப்புணர்வை ஏற்படுத்தல்,
வேதாகம வாசிப்பைத் தூண்டுதல், அருட்சகோதரிகள் மூலம் வழிப்படுத்தல் போன்ற
செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்பதை ஆய்வானது பரிந்துரைக்கிறது.