Abstract:
அமெரிக்காவிலிருந்து 1816ம் ஆண்டு வருகைதந்த மிசனரிமார் இலங்கையில்
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் பெரும் பங்காற்றினார்கள்.
முதன் முதலாக இலங்கையில் சாமுவேல் நியுவெல்ஸ் ஜயர் என்பவர் அமெரிக்க
மிஷன் திரு அவையை உருவாக்கி கல்வி, மருத்துவம் போன்ற சமூகப் பணிகளில்
ஈடுபட்டனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட சபைகள் தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை,
சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் தனித்தனியே மூப்பர் ஆளுகை முறைமையின்
கீழ் இயங்கி வளர்ந்தன. இக்காலகட்டத்தில் இலங்கையில் மட்டுமல்லாது
இந்தியாவிலும் புரட்டஸ்தாந்து சபைகள் விரைவாக வளர்ந்தன. மிஷனரிமாரின்
அர்ப்பணிப்புக்களினாலும், பணிகளினாலும் உருவாக்கப்பட்ட சபைகள் தனித்தனியே
இயங்குவது கிறிஸ்தவ வாழ்விற்கும் கிறிஸ்தவப் பணிக்கும் சவாலாக அமையுமென
மிஷனரிமாரும், சபை மக்களும் கருதியதால் சபைகளின் ஒருமைப்பாட்டை
முதன்மைப்படுத்தி 1908ல் தென்னிந்திய ஜக்கிய சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி
ஒன்றிப்புடன் இயங்கி வந்தனர். இந்த வளர்ச்சியின் விளைவாக 1947ம் ஆண்டு
தென்னிந்தியத் திரு அவை உதயமாகியது. இலங்கையில் தென்னிந்திய ஜக்கிய
சங்கத்தில் அங்கம் வகித்த சபைகள் தென்னிந்தியத் திரு அவையோடு இணைந்து
தென்னிந்தியத்திரு அவை யாழ்த்திருமண்டலமாக இணைந்து கொண்டது. நூற்றாண்டு
வரலாற்றைக்கொண்ட இத்திரு அவையானது 2007ம் ஆண்டு ஏற்பட்ட பிளவு காரணமாக இறையியல் பணியில் பல சவால்களையும், பின்னடைவுகளையும்
சந்தித்தது. இதன்போது தென்னிந்தியத்திரு அவையினரில் ஒருபகுதியினர் பிளவுற்று
அமெரிக்கன் இலங்கை மிஷன் திரு அவை (CACM - Church of the American
Ceylon Mission) என்ற புதிய சபையை உருவாக்கினார்கள். இக்காலகட்டத்தில்
பலவிதமான ஒருமைப்பாட்டு முயற்சிகள் பல தரப்பினராலும் பல வகைகளிலும்
மேற்கொள்ளப்பட்டாலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றது.
இதன் காரணமாக இலங்கையிலே கத்தோலிக்க திரு அவைக்கு அடுத்த நிலையில்
காணப்பட்ட தென்னிந்தியத் திரு அவை யாழ்ப்பாணத்தில் பிளவுபட்டு இறைபணியில்
பாரிய பின்னடைவுகளைச் சந்தித்தது. கிறிஸ்தவர்களைக் குறித்தான மேன்மையான
வாழ்வியல் எண்ணப்பாடு குறைதல், கிறிஸ்தவ வாழ்வின் விழுமியங்கள்
கேள்விக்குறியாதல் போன்ற பிரச்சினைகள் இனங்காணப்பட்டு பவுலின் கடிதங்களின்
வழி ஆய்வானது ஆராயப்பட்டுள்ளது. திரு அவையின் பிளவுகள் இறையியல்
பணியில் மட்டுமல்லாது, கிறிஸ்தவ வாழ்வியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றது
என்பது ஆய்வின் கருதுகோள். 1908ம் ஆண்டு அமெரிக்க மிஷனரிமாரின் சபைகளின்
ஒருமைப்பாட்டு அவசியம் கிறிஸ்தவ வாழ்வியல் இன்றியமையாததொன்றாகக்
காணப்பட்டது. அப்போஸ்தலராகிய பவுல் அடிகளாரின் ஆணித்தரமான சபை
ஒருமைப்பாட்டுச் சிந்தனையில் தென்னிந்தியத்திரு அவை யாழ் திருமண்டலம் மற்றும்
அமெரிக்க மிஷன் திரு அவை ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் பொதுவெளி
இறையியல் கண்ணோட்டத்தில் கலந்துரையாடும் இவ்வாய்விற்கு ஆவண ஆய்வு
முறை, அவதானிப்பு முறை மற்றும் தொகுத்தறிமுறை போன்ற ஆய்வுமுறைகள்
பயன்படுத்தப்படுகிறது. பவுலின் ஒருமைப்பாட்டிற்கான சிந்தனையை இறையியல்
கண்ணேட்டத்தில் கண்டறிவது இவ் ஆய்வின் நோக்கமாகும். ஒருமைப்பாட்டிற்கான
சாதகமான வழிகளைக் கண்டுனர்வதனூடாக ஒருமைப்பாட்டு சிந்தனைகளை
வெளிக்கொண்டுவரும் பரிந்துரைகளை ஆய்வானது முன்வைக்கிறது.