Abstract:
இன்றைய உலகில் கிறிஸ்தவம் அனைத்துலகப் பொது மறையாக உருவாகி
வரும் சூழலில் அதற்கென ஓர் தனிப் பண்பாடும் நாகரிகமும் இருத்தல் அவசியம்
என்ற நிலையைக் கடந்துள்ளது. குறிப்பாக அனைத்து மனுகுலத்திற்கும் அவர்களுக்கே
உரித்தான பண்பாடுகளோடு அவர்களின் சுதேச மறையாகவே அமைதல் சிறப்பான
ஒன்றாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து கீழைத்தேச
நாடுகளுக்கு வருகை தந்த அமெரிக்க மிஷன் மறைபணியாளர்கள் எந்தப் பண்பாட்டில்
திரு அவை பரப்பப்படவில்லையோ அச்சமூகத்தின் விசுவாச வாழ்விலும் சமயம்
காலூன்றாது போய்விடும் என்பதை அறிந்து, யாழ்ப்பாணத்து மக்களின் பண்பாட்டில்
கிறிஸ்தவத்தைப் பரப்பப் சுதேச விடயங்களை பயன்படுத்தி பெரிதும் பங்காற்றியுள்ளனர்
என்பதை எடுத்துரைப்பது ஆய்வின் பிரதான நோக்கமாகும். ஆனால் அமெரிக்க
மிஷன் மறைபணியாளர்கள் தமது பண்பாட்டினுள் அனுபவித்த கிறிஸ்துவை
சுதேசமயப்படுத்தினரா? அல்லது கிறிஸ்தவம் தங்களின் இனப் பண்பாட்டினருக்கும்
உரியது என்ற மனநிலையில் செய்பட்டுள்ளனரா? என்னும் எண்ணக்கருவானது
ஆய்வின் தேடலுக்கு வித்திட்டுள்ளது. நற்தூதுப் பணியாளர்கள் தங்கள் கலாச்சாரத்தில்
கிறிஸ்துவை எமக்கு அறிமுகம் செய்தது தற்செயலான ஒன்று என்பதுடன் காலத்தின்
கட்டாயமாகவும் விளங்கியது. ஆயினும் காலப்போக்கில் சுதேச மக்களின்
பண்பாடுகளுடன் அவர்களுக்கே உரிய மரபில் கிறிஸ்தவம் சுதேசிகளின்
வாழ்வியலோடு கலந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்குள் இருந்தது.
அந்த வகையில் கிறிஸ்தவத்தைச் சுதேச மயப்படுத்துதலில் அமெரிக்க மிஷன்
மறைபணியாளர்களின் பங்களிப்பு காணப்பட்டுள்ளது என்னும் கருதுகோள் ஆய்வில்
முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்காக ஆய்வுடன் தொடர்புடைய நூல்கள்,
கையேடுகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்ட விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்தி,
பெறப்பட்ட விடயங்கள் உய்த்துணர் முறையினூடாக பகுப்பாய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க மிஷன் மறைபணியாளர் சுதேச மக்களின்
பண்பாட்டை, பாரம்பரிய விழுமியங்களை பாதுகாத்ததுடன், சுதேச கூறுகளை
உள்வாங்கி, மறைபரப்பு பணியில் ஈடுபட்டதானது மறை சார்ந்த விடயங்கள்
இலகுவான முறையில் மக்களை சென்றடைய உதவியுள்ளது எனலாம். இன்றும்
நற்செய்தியை அறியாத மக்கள் மத்தியில் நற்செய்தியைக் கொண்டு செல்லும்
சிறந்த முறையாக இவர்களின் செயற்பாடுகள் வாய்ப்பளித்தது எனலாம். அமெரிக்க
மிஷன் மறைபணியாளர்களின் மறைபரப்பு முறை சுதேச மக்கள் மத்தியில்
வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாகத் தமிழ் அகராதி மொழிபெயர்ப்பு, உதயதாரகை
என்ற தமிழ்ப் பத்திரிகை, சாமுவேல் பிஸ் கிறீன் என்பவரின் ஆங்கில மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டமை, யாழ்ப்பாணத்தில் சுதேச மக்களிற்கான நூற்று எழுபத்தைந்து பாடசாலைகள் மூலமாகக் கல்வி புகட்டியமை
என்பன தமிழ் மக்களுக்காக அவர்கள் ஆற்றிய பணிகளில் குறிப்பிட்டுக்
கூறக்கூடியவையாகும். அமெரிக்க மிஷன் மறைபணியாளர்கள் சுதேச பண்பாட்டு
அம்சங்களை உள்வாங்கி மேற்கொண்ட மறைபரப்பு முறையானது இன்றுவரையும்
அவர்களின் பணியானது சிறப்புடன் நீடித்து நிலைக்க காரணமாயிற்று எனலாம்.
ஆய்வானது அமெரிக்க மிஷனரிகளின் மறைபரப்பு முறைகளை எடுத்துரைப்பதுடன்,
மறைபரப்பு பணியில் ஈடுபடும் பலருக்கும் வழிகாட்டும் விடயங்களையும் கொண்டிருக்கும்
என்பதும் குறிப்பிடத்தக்கது.