Abstract:
விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்து
வரும் நவீன உலகில் நாட்டின் முக்கிய அங்கமான மாணவர்களின் நிலை
மாறிச்சென்று கொண்டிருக்கின்றது. அவ்வாறு மாற்றமடைந்து, மனிதநேயப் பண்புகளை
மறந்து, செல்லும் மாணவ சமூகத்தை கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள
கிறிஸ்தவத்தின் அடிப்படையில் கண்ணோக்கி மனிதநேயமுள்ளவர்களாக உருவாக்கி
வாழ்க்கையோடு இணைந்த கல்வியை வழங்கவேண்டும் என்பதே இவ்வாய்வின்
நோக்கமாகும். கிறிஸ்துவின் வாழ்வு கிறிஸ்தவ மாணவத்துவத்திற்கு
உதாரணமாகின்றது. கிறிஸ்து சிறுவயது முதல் தன் வாழ்வின் எல்லாச்
சந்தர்ப்பங்களிலும் அன்பு, தாழ்ச்சி, ஒற்றுமை, பகிர்வு, நீதி, நேர்மை ஆகிய
பண்புகளுடன் வாழ்ந்தார். இப்பண்புகளை தொடர்ந்து ஆதி கிறிஸ்தவ சமூகமும்
கடைப்பிடித்தார்கள். இறுதியாக பல துன்பங்களுக்குள்ளாகி மறை சாட்சிகளாய்
மரித்து இப்பண்புகளை இன்றைய சமூகத்திற்கு விட்டுச்சென்றுள்ளனர். யேசுவின்
பள்ளிக்கூட அனுபவத்தை அறியும்போது தனது ஆரம்பக்கல்வியை பெற்றோரிடம்
கற்றார். பன்னிரண்டு வயதில் அறிஞர்கள் மத்தியில் தனது ஆற்றலை
வெளிப்படுத்தினாரர். தந்தையின் திட்டத்தை நிறைவேற்றினார். அவ்வாறே
மாணவர்களும் யேசுவைப் பின்பற்றவேண்டும். கல்வியும் வாழ்க்கையும் வேறுவேறல்ல.
இவை ஒன்றோடொன்று தொடர்புபட்டது. ஒருவனிடம் நிலைத்திருக்கக்கூடிய அறிவு,
திறன், மனப்பாங்கு ஆகிய துறைகளிலும் ஏற்படும் நடத்தை மாற்றம் கல்வியாகும்.
இவ்வாறாக கிறிஸ்தவமும் கல்வியும் ஒவ்வொரு மனிதரிலும் இரு கண்களாகின்றன.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குழு உணர்வை வளர்த்து ஆரோக்கியமான
போட்டி மனப்பான்மை வளரவும் வெற்றி தோல்விகளை சமமாக மதித்து நல்லொழுக்கம்
உள்ளவர்களாக எதிர்கால வாழ்விற்கு தம்மை தயார்படுத்தி வாழ்வதே கிறிஸ்தவ
மாணவத்துவம் ஆகும். இவற்றோடு மனிதனின் வளர்ச்சிக்கு துணையாக இருந்த
தொடர்பு சாதனங்கள். அவர்களின் அழிவிற்கும் காரணமாக அமைகின்றன.
தற்காலத்தில் மாணவர்களை சுற்றியுள்ள சூழலே அவர்களின் கல்வியில் ஆதிக்கம்
செலுத்தியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்கை நேரங்கள் குறைக்கப்பட்டு தீய
பழக்கங்களிற்கு உட்படுவதை காண முடிகின்றது. தற்கால பூகோளவியல் மாற்றங்கள,;
முறையற்ற சமூகத்திற்கெதிரான பாவனைகள் போன்ற காரணங்களினால்
மாணவத்துவம் சீரழிகின்றது. மாணவர்களை திருவிவிலியத்தின் உதவியுடன்
பெற்றோர், திருநிலையினர், கல்வியலாளர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
சிறந்த மாணவச் சமூகத்தை உருவாக்குவது எனது கருதுகோளாகும். இதனை
அடிப்படையாகக் கொண்டு அவதானிப்புமுறை, தொகுத்தறிமுறை போன்ற ஆய்வு
முறைகளின் உதவியுடன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. கல்வி முறையானது
வகுப்பறையில் மட்டுப்படுத்தாமல் இணைப்பாட விதான செயற்பாடுகளினூடாக மாணவனை மையப்படுத்தி முறையான கல்வி கொடுக்கப்பட வேண்டும். இதனால்
அவர்களின் வினைதிறன் அதிகரிக்கப்படும். முறையான கல்வி, கிறிஸ்தவம் என்பன
நல்ல வாழ்வியலை கொடுக்கும். மாணவனை மையமாகக் கொண்ட கல்வி முறைகளை
பயன்படுத்துவதின் ஊடாக விழுமியப் பண்புகளை வளர்த்து சிறந்த சமூகத்தை
கட்டி எழுப்ப முடியும்.