| dc.description.abstract |
‘மறைசாட்சியம்’ என்ற கருத்தியலானது பாரம்பரியக் கிறிஸ்தவக்
கண்ணோட்டத்திலிருந்து உருவாகி, நவீன இறையியல் சிந்தனையிலே வளர்ச்சிபெற்று,
இன்று பன்முகத்தன்மை கொண்டதாக மாறிவருகின்றது. தொடக்ககாலத்தில் இயேசு
கிறிஸ்துவுக்காகவும் அவரது படிப்பினைகளுக்காகவும் உயிர்த்தியாகம் செய்கின்ற
நிலையை மறைசாட்சியம் என்று கருதிவந்தபோதும், சமகாலத்தில் சமய
நம்பிக்கைகளைக் கடந்து, மானுடத்தை முதன்மையாகக்கொண்டு மனித
நேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் நிகழும் உயிர்த்தியாகங்கள் நவீன
மறைசாட்சியமாகக் கருதப்படுகின்றன. “ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும்
நிறைவாகப் பெறும்பொருட்டு வந்த” இயேசு, மனிதர் அனைவரும் அவ்வாழ்வைப்
பெறும்பொருட்டுத் தம் வாழ்வை அர்ப்பணித்தார். அவரைப் பின்பற்றக்கூடிய
எல்லோருமே இயேசுவைப்போன்று பிறர்வாழ தம் வாழ்வைத் தியாகம் செய்ய
முன்வரும்போது, மனிதர் உள்ளங்களில் இறைவனின் திருவுளம் முழுமையாய்
நிறைவேறுகின்ற ‘இறையாட்சி’ மலரும் என்பது இயேசுவின் எண்ணம். இயேசு தமது
பகிரங்கப் பணிகளிலும் போதனைகளிலும் மானுடம் சார்ந்த இறையாட்சியையே
தமது முதன்மையான குறிக்கோளாக வெளிப்படுத்தினார். மேலும் இயேசு தான்சார்ந்த
யூதசமய நம்பிக்கைக்காக இறக்கவில்லை, மாறாக மானுட விடுதலைக்காகவும்
மனித நேயத்திற்காகவுமே தம் உயிரைத் தியாகம் செய்தார். அவ்வாறே இயேசு
இவ்வுலகில் ஏற்படுத்த விரும்பிய மனிதநேயம் சார்ந்த இறையாட்சியும், அதனை
முழுமையடைச்செய்ய உருவாக்கப்பட்ட திரு அவையும் தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ,
நாட்டிற்கோ, சமயத்திற்கோ உரியதல்ல, ஆனால் மனிதர்கள் அனைவருக்கும்
சொந்தமாகும். ஆகவே மனிதநேயத்திற்காக உழைக்கின்ற எல்லோருமே இறையரசின் பங்காளிகளாவர். இந்தவகையில் கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கைக்காக உயிரை
இழக்கின்ற பாரம்பரிய கிறிஸ்தவ மறைசாட்சியக் கோட்பாடானது, நவீன இறையியற்
சிந்தனையின் அடிப்படையில் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் பெற்று, இன்று
மனித நேயத்திற்காக இடம்பெறுகின்ற உயிர்சாட்சியங்களை உள்ளடக்கியதாக
உருப்பெற்றுள்ளது. எனவே ‘நவீன மறைசாட்சியம்’ என்ற கருத்தியலானது
சமயங்களைக் கடந்த, மானுடவியல் சார்ந்த ஒரு வாழ்வியற் தத்துவமாக
அமைகின்றது. 20ஆம் நூற்றாண்டின் சிறந்த இறையியலாளர்களில் ஒருவரான கார்ல்
ரானர் ((Karl Rahner) கூற்றுப்படி, மறைசாட்சியம் என்பது சமயங்களைக் கடந்து
மானுடம் சார்ந்த உண்மை, நீதி, சமாதானம், அன்பு போன்ற மனித விழுமியங்களை
அடிப்படையாகக் கொண்ட கருத்தியலாக வளர்ச்சிபெற வேண்டும். மேலும், வெவ்வேறு
சமூகச் சூழமைவில் மனிதர்கள் எதிர்கொள்கின்ற வாழ்வியல் பிரச்சனைகளுக்கு
விடைகாண முயல்கின்ற மனிதநேய மைய விடுதலை இறையியல்களின் தோற்றம்,
மறைசாட்சியம் என்ற கருத்தியலை இன்னும் வலுவடையச் செய்துவருகின்றது.
இந்த ஆய்வானது, சமகாலத்தின் மானுட நேயத்திற்கான உயிர்த்தியாகங்களைக்
கிறிஸ்தவ மறைசாட்சியத்துடன் ஒப்பிட்டு ஆராய்கின்றது. இம்முயற்சியின்போது,
கிறிஸ்தவத்திற்கு அப்பால் ஏனைய சமயங்களிலும் இத்தகைய மறைசாட்சியம் என்ற
கருத்தியல் காணப்படுவது தெளிவாகியுள்ளது. மேலும் இலங்கையின் வெவ்வேறு
சமயங்களிலே எடுத்துரைக்கப்படுகின்ற மறைசாட்சிய நிகழ்வுகள் அச்சமயங்களின்
இறையியல் வளர்ச்சியிலும், ஆன்மீக உறுதிப்பாட்டிலும், சமயங்களின் பரம்பலிலும்
செல்வாக்கை செலுத்தி வந்தன என்பதையும் அறியமுடிந்துள்ளது. எனவே
‘மனிதநேயத்திற்கான உயிர்சாட்சியம்’ என்ற கருத்தியலானது நவீன உலகில்
வாழ்வியல் தத்துவமாக மாறிவருவது வெளிப்படை. இன்றைய இலங்கைச் சூழமைவில்
பல்சமய சமூகத்தவரையும் சென்றடையக்கூடிய ‘பொதுவெளி இறையியலுக்கு’ இந்த
வாழ்வியல் தத்துவமானது பங்களிப்பு செய்வதோடு, மானுடம் சார்ந்த புதியதொரு
ஆன்மீகத்தை உருவாக்கவும் வழிவகுக்கின்றது. |
en_US |