| dc.description.abstract |
அரங்கக் கலைகள் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவும், சமூக விமர்சனமாகவும்,
சுதந்திர உரையாடல் வெளியாகவும் விளங்குகின்றன. அவை காலந்தோறும் மனிதத்
திறன்மிகு படைப்புக்களாக வெளிப்பட்டு நிற்கின்றன. இதன் பின்புலத்தில் யாழ்ப்பாணப்
பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டுகளின் பின்னர் பல்வேறு அரசியல் நிலைமைகள்
அவ்வப்போது மக்கள் வாழ்வியலிற் பிரதிபலித்து வருவதினை அவதானிக்கலாம்.
இதன்போது மக்களின் சமூக நீதி குறித்த விவாதங்களுக்கும், விருப்பிற்கும் ஏற்றால்
போல களம் அமைத்துக் கொடுப்பதில் அரங்கக் கலைகளுக்கும் கணிசமான பங்கு
இருக்கின்றது. இடர் மிகுந்த காலங்களில் ஆலயச் சூழலில் இடம்பெற்று வருகின்ற
இவ்வகை அரங்கச் செயற்பாடுகள் சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டுவதாகவும்,
நெறிப்படுத்துவதாகவும், வழிப்படுத்தவதாகவும் காணப்படுவதோடு ஒருவகை
உளவியல் ஆற்றுப்படுத்தலாகவும் விளங்குகின்றது. ஆலயச் சூழலில் நடைபெறும்
ஆண்டு விழா, மன்ற விழாக்கள், கிறிஸ்மஸ் விழா, இளையோர் நாடகப் போட்டி
நிகழ்வு, சிறப்புக் கலை நிகழ்வுகள் போன்றவை அரங்க முயற்சிகளுக்கான
சந்தர்ப்பமாக அமையப்பெற்றன. அதேவேளை யாழ்பாணம் குருமட மணவர்களின்
கற்றல் நடவடிக்கையிலும், கலை விழாவிலும் இடம்பெறுகின்ற அரங்க முயற்சிகளும்
இங்கு குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க வேதாகமக் கதைகளை, சிந்தனைகளை
மற்றும் புனிதர்கள், மறைபரப்பாளர்களை அடியொற்றிய கதைகளாகக்
காணப்பட்டுவதோடு, கற்பனைக் கதைகளைக் கொண்ட நாடகங்களாகவும்
மேற்கிளம்பின. இவை அக்காலத்து சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்பும்
உப கருத்துக்களைக் கொண்டமைந்த அரங்க முயற்சிகளாகவும் இனங்காண
முடிகின்றது. அவை உருவ, உள்ளடக்க ரீதியாக பல்வகைமை கொண்டு
காணப்படுகின்றன. ஆலயச் சூழலில் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகள் நடைபெறும்
மரபு நிலவி வருகின்ற அதேவேளை, அவை தவிர்ந்த குறிப்பிடத்தக்க சமகால
அரங்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவை பற்றிய போதுமான தகவல்கள்
கிடைக்கப் பெறாமையும், அத்தகைய அரங்க முயற்சிகளின் காத்திரத்தன்மை
குறித்து பெருமளவில் பேசப்படாமையும் இவ் ஆய்வினை மேற்கொள்ளத் தூண்டியது.
கிடைக்கக் கூடிய நாடகப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டும், நாடக
ஆற்றுகைகளின் இலத்திரனியல் ஆவணங்கள், அச்சு ஊடகங்களின் தரவுகள், களப்
பணி ஊடாகவும் பெறும் தரவுகள் திரட்டப்பட்டு பண்புசார்முறை, விவரணமுறை
என்னும் ஆய்வு முறைமைகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. நாடகங்கள்
தயாரிக்கப்பட்ட முறைமை, நாடக வடிவம், கதை அமைப்பு, மோதுகை, கட்டமைப்பு,
பாடுபொருள், பாத்திரங்கள், அதன் முடிவுகள் பல்வகையில் அமையப்பெற்று
உள்ளன. நாடக எழுத்தாளர், நெறியாளர் போன்ற கலைஞர்கள் பலரும் இனங்
காணப்பட்டுள்ளனர். சாதி, ஒழுக்கக்கேடு, அதிகாரம், வன்முறை, பாரபட்சம் போன்ற
விடையங்களை கலைத்துவமான அரங்கப் ஆற்றுகைகளாக ஆலயச் சூழலில்
நிகழ்த்தப்பெற்றுள்ளன. சவால்மிக்க காலங்களில் சுதந்திரம் மிக்க கலைச்
செயற்பாடுகளை நிகழ்த்துவதற்கு ஆலயச் சூழல் களம் அமைத்தும் கொடுத்துள்ளது.
இவ்வாறான அரங்கச் செயற்பாடுகள் ஆலயச் சூழலில் பரவலாக்கப்பட்டு சமூக
நீதியை நிலைநாட்டுவதற்கு உந்துதலாக அமையலாம். |
en_US |