| dc.description.abstract |
ஆசியப் பிராந்தியத்தில் பாலினப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கிறிஸ்தவம்
குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றது. யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள
அகவொளி குடும்பநல சேவைகள் மையமானது குடும்பநல ஆலோசனை வழங்கலைப்
பிரதான சேவையாகக் கொண்டியங்கி வருகின்றது. கிறிஸ்தவ போதனைகள் /
மறையுரைகள் மற்றும் நடைமுறைகள் ஆசியச் சமூகங்களில் பெண்களைக்
கீழ்நிலைக்கு உட்படுத்தும் பாரம்பரிய ஆணாதிக்க நெறிமுறைகளை எதிர்த்தல்,
பெண்களுக்கு கல்வி மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்குதல், குடும்பங்களில்
இடம்பெறும் வன்முறைகளை நிவர்த்தி செய்தல், திருமணம் மற்றும் குடும்பத்தில்
பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், நலிந்த குடும்பங்களின் பொருளாதார
மேம்பாட்டை ஆதரித்தல் மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்
போன்றனவற்றில் பங்காற்றியுள்ள வகையினை ஆராய்வதே இந்த ஆய்வின்
நோக்கமாகும். அகவொளி இயக்குநர், பணிபுரிவோர், பிரச்சினைகளைத் தீர்த்துக்
கொள்வதற்காக அங்கு சென்றோர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
நேர்காணல்கள் மற்றும் வெளியீடுகள், சஞ்சிகைகள் என்பவற்றின் மூலமாகத்
திரட்டப்பட்ட தரவுகள் என்பனவற்றைக் கொண்டு அளவு சார் மற்றும் பண்பு சார்
ஆய்வு முறையியல் இணைந்த ஒரு கலப்பு முறைமையில் இந்த ஆய்வு
இடம்பெற்றுள்ளது. அகவொளி நிலையம் திருமணத்திற்கு முன்னர் ஆண் மற்றும்
பெண்களிற்குத் தேவையான குடும்ப மற்றும் சமூக நல ஆலோசனைகளை
வழங்குவதுடன், திருமணத்தில் பரஸ்பர மரியாதையையும் கூட்டாண்மையையும்
ஊக்குவிக்கின்றது. அத்துடன் குடும்பங்களுக்குள் பொறுப்புக்கள் சமமாகப்
பகிரப்படுவதனை ஊக்குவிப்பதுடன், குடும்ப வாழ்வில் அவ்வப்போது ஏற்படக் கூடிய
பால்நிலைசார் சவால்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குகின்றது. மேலும்,
அவற்றைக் குறைப்பதற்குரிய போதிய வழிகாட்டுதல்களையும் தொடர்சியாக வழங்கி
வருகின்றது. கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்ட தனி மனிதர்களாகப் படைக்கப்பட்ட
ஆண் - பெண் சமமான மதிப்பு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்துவதன் மூலம்
அவர்களுக்கு வலுவூட்டிவருகின்றது. ஆசியக் கிறிஸ்தவம் விவிலிய விளக்கங்களை
விமர்சன ரீதியாக ஆய்வு செய்தல், பாலினத்தை உள்ளடக்கிய தேவாலய
நிர்வாகக்கட்டமைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் சமூகக் கலாசாரத் தாக்கங்களை
நிவர்த்தி செய்தல் போன்றவற்றின் மூலம் பாலினப்பிரச்சினைகளை நிவர்த்தி
செய்வதில் மிகவும் வினைதிறனான பங்களிப்பினை வழங்க முடியும். பாலினப்
பிரச்சினைகளை பற்றிப் பேசுவதில் ஆசிய கிறிஸ்தவத்தின் தாக்கம் இப்பிராந்தியம்
முழுவதிலும் ஒரே மாதிரியாகக் காணப்படாவிட்டாலும், சில சந்தர்ப்பங்களில்
பாரம்பரிய பாலின பங்களிப்பினை வலுப்படுத்தக் கிறிஸ்தவப் போதனைகள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, பாலினப் பிரச்சினைகளில் அறிவியல்
சிந்தனையுடனும், நுணுக்கத்துடனும் ஈடுபடுவதன் மூலம் ஆசியக் கிறிஸ்தவம்
நேர்மறையான மாற்றத்திற்கான சக்திவாய்ந்த ஒரு கருவியாகவும் முற்போக்கான
மாற்றத்திற்கான ஊக்கியாகவும் இருந்து வருகின்றது. ஒட்டுமொத்தமாக நோக்கும்
போது பாலினப்பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தீய
விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நடைமுறைகளை எதிர்ப்பதிலும், ஆசியாவில்
குறிப்பாக இலங்கையின் யாழ்மறை மாவட்டத்தில் அகவொளி நிலையம்
குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கி வருகின்றது என்று இந்த ஆய்வு முடிவு
செய்கின்றது. |
en_US |