Abstract:
ஈழத்தின் மரபுவழி நாடகமரபாகிய கூத்து வடிவத்திற்கு நீண்ட
பாரம்பரியமுள்ளது. அவை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டிய,
வாழ்வியலுடனும் சமய நம்பிக்கைகளுடனும் இரண்டறக் கலந்த தொடர்புகளுடன்
காணப்படுகின்றன. யாழ்ப்பாணத் தென்மோடி கூத்துமரபு என வழங்கப் பெறுகின்ற
கத்தோலிக்க கூத்துமரபானது உள்ளூர் நாட்டார் வடிவமாக இருந்தாலும்
காலனித்துவத்தினை தாண்டி நிலைப்பதற்கும் சாதாரணமக்களுக்கும் இறை இயலை
வெளிப்படுத்தவல்ல வடிவமாகவும் இருந்தமைக்கும் கத்தோலிக்க திருச்சபை அதற்கு
வழங்கிய ஊக்கமும் பொது நிலைக்கிறிஸ்தவ கலைஞர்களின் அரப்பணிப்புமிக்க
பங்களிப்புமே காரணமாகும். காலனித்துவக் காலத்தில், கத்தோலிக்க மார்க்கம்
இங்கு ஆழம் பெற்று பரவலடைந்தமைக்கு முக்கியமான ஒரு காரணமாக கிறிஸ்தவ
சபைகளுடன் வருகை தந்த குருக்கள், கலை, இலக்கியம், நாட்டாரியல், அரங்கியல்
போன்ற பலவற்றையும் இங்கிருந்த பண்பாட்டு மரபுகளுக்கூடாகவே அணுகி புனிதர்கள
வேதசாட்சிகளின் வரலாறுகளை துன்பியல் நிறைந்த அவர்கள் வாழ்வு
முன்மாதிரிகைகளை முன்வைத்துள்ளார்கள். புனிதர்கள் வேதசாட்சிகள் பற்றிய
வரலாற்றினை இங்கிருந்த மக்கள் கூத்துக்கள் வாயிலாக அதிகம் அறிந்திருக்கின்றார்கள்
என்பதனை அண்மைக் காலத்தில் தேவசகாயம்பிள்ளை அவர்களின் புனிதர்
நிலைக்கான உயர்த்துதல் நிகழ்வில் அறியக்கூடியதாக இருந்துள்ளது. இந்தியாவிலே
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருதங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட
வேதசாட்சியாகிய தேவசகாயம்பிள்ளைக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம்
திகதி பரிசுத்த பாப்பரசர் அவர்களினால் உரேமாபுரியிலே புனிதர் பட்டம்
கொடுக்கப்பட்டது. அந்நிகழ்வுகள் ஈழத்திலே அறியப்பட்டபோது அவர் பற்றியதான
வரலாற்றினை; ஈழத்தவர்கள் அறிவதில் ஆர்வமாக இருந்தார்கள். இளவயதினர்கள்
இளம் குருக்கள் முதலாக அவர் வரலாற்றினை அறிந்திருக்கவில்லை. ஆனால்
மூத்தவர்கள் பலரும் தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றினை சிறப்பாகக்
கூறக்கூடியவர்களாக இருந்தனர் அதற்கான காரணத்தினை ஆராய்ந்த போது
அவர்கள் அராலியைச் சேர்ந்த ஸ்ரீமுத்துக்குமாரு புலவரால் கூத்தாக 1824 ஆம்
ஆண்டளவில் எழுதப்பட்டு ஏட்டுப்பிரதியாக பயிலப்பட்டு பல இடங்களிலும்
மேடையேற்றப்பட்ட தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்தினை அதிகம் பார்த்தவர்களாக
இருந்தனர். எனவே பொதுவெளியில் அவரை அறிமுகம் செய்த கூத்துக் கலைமரபின்
தொடர்புக் காத்திரத்தினை தேவசகாயம்பிள்ளை கூத்தினை பதச்சோறாக கொண்டு
ஆராயும் நோக்கோடு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. எனவே மக்கள் மத்தியில்
புனிதர்களை அறிமுகம் செய்த வகையிலும் இறைஇயலை சாதாரணர்களுக்கு
அறிமுகம் செய்த வகையிலும் கூத்துமரபுக்கு முக்கியமான பங்களிப்பு
இருந்துள்ளமையை அறிவதும் தேவசகாயம்பிள்ளை கூத்தின் முக்கியத்துவங்களையும்
தனித்துவத்தினையும் விளங்கிக்கொள்வதனூடாக தற்போதைய உலமயமாக்கல்
போன்ற நவீன சிந்தனைப்பள்ளிகள் உள்ளூர் கூத்து மரபினை அழித்துச் செல்லாது
பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இக்கட்டுரையின்
நோக்கமாக உள்ளது. இவ்வாய்வானது அரங்காற்றுகைகளின் வெளிப்பாடுகளையும்
அவற்றுக்கான பனுவலையும் அது தொடர்பான கருத்து வெளிப்பாடுகளையும்
கொண்ட பண்புசார் ஆய்வாக மேற்கொள்ளப்படுவதனால் இவ் ஆய்வில் தொகுப்பு
மற்றும் விவரண முறையியல் , பகுப்பாய்வு மற்றம் வரலாற்று முறையியல் என்ற
பல்வேறு செயற் தொகுதிகளின் கூட்டு மொத்தமான ஆய்வு முறையியல்களினூடாக
மேற்கொள்ளப்படுகின்றது.