Abstract:
இலங்கைக்கு 1505 இல் ஜரோப்பியர்கள் வருகைதந்த போது அது கோட்டை,
யாழ்ப்பாணம், கண்டி என மூன்று இராட்சியங்களாகப் பிரிந்திருந்தது. காலனிய
ஆட்சிக்காலமே ஒன்றிணைந்த இலங்கையை 1815 இல் உருவாக்கியது. அந்நிலை
இன்றுவரை நீடித்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை
ஒருசில கலவரங்கள் காலனிய அரசுக்கு எதிராக நடைபெற்றிருந்த போதும் அது
பெரியளவில் வளர்த்தெடுக்கப்படவில்லை. இலங்கையில் நிகழ்ந்த எழுச்சி என்பது
பண்பாட்டெழுச்சியாகவே அடையாளப்படுத்துகிறது. கிறிஸ்தவமிசனரிகளின் வழி
அறிமுகமாகிய ‘நவீனத்துவம்’ இலங்கைச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலுமான
கட்டுமானங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகம், அரசியல், பொருளாதாரம்,
சமயம், கல்வி, தொழில்வாய்ப்பு, கலை கலாசாரங்கள் என எல்லாத் தளங்களிலும்
அது பிரதிபலித்தது. கிறிஸ்தவத்தின் பன்முகத்தளங்களிலான இயங்கியல்
சுதேசிகளை எதிர்த்தளத்திலான புத்துருவாக்கச் சிந்தனைக்கு உந்தித்தள்ளியது.
எல்லாத் தளங்களிலும் சுதேச மீட்டுருவாக்கம் முதன்மை பெற்றது. பொருளாதாரத்தில்
புதிய குட்டி முதலாளிய உருவாக்கம் சமூகத்தின் அசைவியக்கத்தில் தாக்கத்தைச்
செலுத்துகிறது. சமயம், மொழி என்பன முதன்மையுற்றன. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ
சமயங்களுக்குச் சமமாக, புரட்டஸ்தாந்து சைவம், புரட்டஸ்தாந்து பௌத்தம் என்பன
உருவாயின. அதேவேளை இஸ்லாம் தன் நிலையிலிருந்து பெரிதும் மாறாவிடினும்
நவீன கல்விக்கொள்கையின் வழி தன்னைப் புத்தாக்கம் செய்து கொண்டது.
சமூகத்தின் பன்முகத்தளங்களில் சமயங்களிடையே பூசல்கள் உருவாயின. 1915இல்
நிகழ்ந்த முஸ்லீம், பௌத்த சிங்களக் கலவரம், முதலாம் உலகப்போரின் தாக்கம்
அதற்குச் சமகாலத்தில் அநகாரிக தர்மபாலாவின் தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான
கருத்தியல் நிலை, சிங்கள, பௌத்த தேசிய கருத்துநிலை உருவாக்கம் என்பவற்றிற்கு
இடையில் ஐக்கிய இலங்கை எனும் தேசியவாத எழுச்சி இடம்பெறுகிறது.
இவ்வெழுச்சியில் சமயங்கள் ஏற்படு;த்திய தாக்கம் எத்தகையது என்பதே இங்கு
ஆய்வுப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஐக்கிய இலங்கை எனும்
தேசியவாத எழுச்சியில் சமயங்களின் வகிபங்கை அறிதலே இந்த ஆய்வின்
முதன்மை நோக்கமாகும். இனவாதத் தேசியம், ஒற்றைத் தேசியம், சமய, மொழி
வழித் தேசியம் எனும் கருத்தியல்களின் உருவாக்கம், செல்நெறி என்பவற்றை
அறிதல் துணை நோக்கமாகும். இலங்கையின் தேசியவாத கருத்தியல் எழுச்சியில்
இருபதாம் நூற்றாண்டின் முற்கூறு, இங்கு ஆய்வு எல்லையாக எடுத்துக்
கொள்ளப்படுகின்றது. இலங்கையின் தேசிய வாதக் கருத்துநிலை உருவாக்கத்தில்
சமயங்களின் வகிபாகம் தொடர்பாக விரிவான ஆய்வுகள் இடம்பெற்று இருப்பதாக
அறிய முடியவில்லை. இந்த ஆய்வுக்கு வரலாற்று ஆய்வுமுறையியல், விவரண
ஆய்வுமுறையியல், ஒப்பீட்டு ஆய்வுமுறையியல் என்பன வும் தேவையான இடங்களில்
பகுப்பாய்வும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வு இன்றைய இலங்கைத் தேசியம்
உருவாகுவதற்கு சமயங்களின் வகிபங்கை அறிவதற்கும் ஆய்வதற்குமான தொடக்கப்
புள்ளிகளைக் கண்டடைய உதவும்.