Abstract:
கிறிஸ்தவத்தில் நோக்கில் திருவழிபாடானது இறைமக்கள் இறைமகன் இயேசுவுடன் இணைந்து இறைவனுக்குச் செலுத்தும் வழிபாடாகவே காணப்படுகின்றது. திருவழிபாடு குறித்து முன்வைக்கப்படும் விளக்கங்களில் கத்தோலிக்க சமய வரலாற்றில் கூட்டப்பட்ட சங்கங்களில் இரண்டாம் வத்திக்கான் சங்கமே திருவழிபாட்டில் பொதுநிலையினரின் பங்கேற்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. திருவழிபாட்டின் முக்கியத்துவமும் அதில் பங்கேற்பதன் அவசியமும் குறித்து ஆய்வுசெய்யும் நோக்குடன், இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் மறைக்கோட்டத்தில் உள்ள கற்கிடந்தகுளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கற்கிடந்தகுளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கைச் சார்ந்த மக்கள் நடைமுறையில் திருவழிபாடுகளில் பங்கெடுப்பதானது கணிசமான அளவு குறைந்துள்ளமையானது ஆய்வுப் பிரச்சினையாக நோக்கப்பட்டுள்ளது. பொதுநிலையினருக்கு திருவழிபாட்டின் மகத்துவத்தை எடுத்துரைத்தலும் அத்தோடு திருவழிபாட்டில் முழுமையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பங்குகொள்வதன் அவசியத்தை ஏற்படுத்துதலும் இவ் ஆய்வின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் ஆய்வு குறித்த தேடலை முன்னெடுக்கும் வகையில் உய்த்துணர் முறை, வரலாற்று முறை, அவதானிப்பு முறை போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. கற்கிடந்தங்குளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கில் பொதுநிலையினரின் பங்கேற்புத் தொடர்பான விடயங்களை அறிய அவதானிப்பு முறையும், நூல்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பகுப்பாய்வு முறையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருவழிபாட்டில் பொதுநிலையினரின் கடந்த ஐந்து ஆண்டுக் கால பங்கேற்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு திருவழிபாட்டில் பொதுநிலையினரின் பங்கேற்பின் அவசியத்தை மேலும் வெளிக் கொணருவதற்கான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்வைப்பதற்கான பரிந்துரைகள் ஆய்விலே முன்மொழியப்பட்டுள்ளன.