Abstract:
படைப்பின் தொடக்கத்தில் கடவுளால் நிறுவப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட திருமணம், குடும்பத்தை நிறுவுவதற்கான ஒரு அடித்தளமாகச் செயல்படுகிறது. இது கணவன், மனைவி இருவரும் ஒரே உடலாக இன்பத்திலும், துன்பத்திலும் நிலைத்திருந்து, சிறந்த குடும்பத்தை உருவாக்கி, திரு அவையின் பணிக்கு ஒரு உயிருள்ள சாட்சியமாகச் செயல்படுகிறது. கிறிஸ்தவத்தில் திருமணம் குறித்துப் பல படிப்பினைகளும் வழிகாட்டல்களும் காணப்படுகின்றன. ஆயினும் திருமணமாகி வாழ்பவர்களிடையே பல முரண் நிலைகளும், மணமுறிவுகளும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இது குறித்த விடயங்கள் ஆய்வுகளில் பேசப்பட்டு இருந்தாலும் இந்த ஆய்வானது, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவிபுரம் என்னும் கிராமத்திலுள்ள திருமண வாழ்வு பற்றிய விடயங்களையும் பவுலின் படிப்பினைகள் எடுத்துரைக்கும் திருமண வாழ்வு குறித்த போதனைகளையும் அடிப்படையாகக் கொண்ட தேடலாக அமைந்துள்ளது. தேவிபுரம் என்னும் கிராமத்தில் திருமண முறிவுகள் அதிகரித்து வருகின்றமையானது ஆய்வுப் பிரச்சினையாக நோக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவிபுர கிராமத்திலுள்ள சுயாதீன திரு அவைகளில் அதிகரித்து வரும் திருமண முறிவுகளை ஒரு கிறிஸ்தவ சமூகவியல் பார்வையில் அவதானிக்கும் நோக்குடன் ஆய்வு அமைகின்றது. இதன்படி விவிலியத்தில் திருமணம் பற்றிய பவுலின் படிப்பினைகளின் அடிப்படையில் ஆய்வில் கருத்துக்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு தேவிபுர கிராமத்திலுள்ள சுயாதீன திரு அவைச் சமூகத்தில் காணப்படும் திருமண முறிவுகளையும் அடையாளம் காண கள ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளது. கள ஆய்வில் பெறப்பட்ட தரவுகள் தொகுக்கப்பட்டு, திருமணம் முறிவுபடாமல் இருக்கச் சுயாதீனத் திரு அவைகள் எவ்வாறான வழிகாட்டல்களை வழங்கலாம் என்னும் பரிந்துரைகளும் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் கிறிஸ்தவத் திருமணத்தின் முக்கியத்துவமும் புனித பவுல் முன்வைக்கும் திருமணம் குறித்த படிப்பினைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் புதுக்குடியிருப்பு தேவிபுரக் கிராமத்திலுள்ள சுயாதீனத் திரு அவைகளில் முறையான திருமண முன் ஆயத்தங்களும், வழிகாட்டல்களும்; இல்லாமையால் திருமணத்தின் புனிதத் தன்மையை உணராது பல குடும்பங்கள் சிக்கல்களின் பின்னணியில் இருப்பது ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே சமூகத்தின் பிரதான அலகான குடும்பத்தைக் கட்டியெழுப்பும் பணி சமயப் பின்னணியிலும் நோக்கப்பட்டு வழிகாட்டல்கள் வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக தேவிபுற பகுதியிலுள்ள சுயாதீன திரு அவைகளில் பல வழிகாட்டல் திட்டங்களும் முன்னெடுப்புக்களும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எனவே ஆய்வானது திருமணத்தின் புனிதத் தன்மையைப் பேணவும், திருமண உறவு நீடித்து நிலைத்திருப்பதற்கு அன்புறவு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு மற்றும் திரு அவைகளில் வழங்கப்படும் வழிகாட்டல் பயிற்சிகள் அவசியம் என்பதையும் உணர்த்தி நிற்கிறது.